புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத வீடுகளுக்கு விடிவுகாலம்: வரைமுறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை நகர அமைப்பு குழுமத்தின் அனுமதி பெற்று வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறுவதைக் கட்டுப்படுத்த கடந்த 2017-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவரப்பட்டு, அங்கீகாரம் இல்லாத மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டன.
இருப்பினும், புதுச்சேரியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. நகர அமைப்பு குழுமத்தின் அனுமதி பெறாமல் கட்டடங்களைக் கட்டுவது, அல்லது முதல் தளம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு மூன்று தளங்கள் வரை கட்டுவது போன்ற விதிமுறை மீறல்களால் வீட்டு உரிமையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக, அவசரத் தேவைகளுக்குக் கூட தங்கள் வீடுகளின் மீது வங்கிக் கடன் பெற முடியாமல் திண்டாடி வந்தனர். இப்பிரச்னைக்குத் தீர்வு காண அரசு தனி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு செவிசாய்த்த புதுச்சேரி அரசு, அங்கீகாரம் இல்லாத வீடுகளை ஒருமுறை திட்டத்தின் கீழ் வரன்முறைப்படுத்த 2025 ஜூலை 16 அன்று அரசாணை வெளியிட்டு ஓராண்டு வாய்ப்பளித்தது.
இதன் கால அவகாசம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 15.07.2029 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கட்டண விவரங்கள்:: இத்திட்டத்தின் கீழ் குடியிருப்பு கட்டடங்களை வரன்முறைப்படுத்த சதுர மீட்டருக்கு 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்டடங்கள் மற்றும் மிக்ஸ்டு பில்டிங்குகளுக்கு சதுர மீட்டருக்கு 750 ரூபாயும், பலமாடி கட்டடங்களுக்கு சதுர மீட்டருக்கு 1,000 ரூபாயும் வரன்முறை கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்களின் அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை 50 சதவீத கட்டண சலுகையுடன் அங்கீகாரமாக்கிக் கொள்ளலாம்.
இவற்றுடன், விண்ணப்பக் கட்டணமாக குடியிருப்பு கட்டடங்களுக்கு 5,000 ரூபாயும், பிற கட்டடங்களுக்கு 10,000 ரூபாயும் செலுத்த வேண்டும். பரிசீலனைக் கட்டணமாகச் சதுர மீட்டருக்குக் குடியிருப்பு கட்டடங்களுக்கு 20 ரூபாயும், பிற கட்டடங்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாமல் உள்ள 3.50 லட்சம் வீடுகள் பயன்பெற்று வரன்முறைப்படுத்தப்படும். அதேவேளையில், இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு சுமார் 300 கோடிக்கு மேல் ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.