உள்ளூர் கடைகளில் வணிகம் பாதிப்பு; மாநகரங்களில் இரட்டிப்பு வியாபாரம்: வெற்றி பயணத்தால் ஏற்பட்ட விளைவு

30

சென்னை: அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தால், உள்ளூர் வணிகர்களின் தொழில்கள் பாதிக்கப்படுவதும், நகரங்கள், மாநகரங்களில் வியாபாரம் இரட்டிப்பாகி வருவதாகவும், அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், 'விடியல் பயணம்' பெயரில், சாதாரண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், 7,500 சாதாரண கட்டண நகர பஸ், மலை பகுதிகளில் இயக்கப்பட்ட பஸ்களில் தினமும் சராசரியாக, 59 லட்சம் பேர் பயணித்தனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, பெண்களுக்கான இலவச பஸ் திட்டத்தை, 'வெற்றி பயணம்' என்ற பெயரில், இம்மாதம், 2ம் தேதி முதல் விரிவாக்கம் செய்தது.

இத்திட்டத்தின் கீழ், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில், 'ஏசி' பஸ் தவிர, மற்ற அனைத்து பஸ்களிலும் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம். இதேபோல், மாவட்டங்களில் சாதாரண, எல்.எஸ்.எஸ்., மலைப்பகுதி சாதாரண பஸ்களிலும் பயணிக்கலாம்.

எந்த பஸ்களிலும் ஏறலாம் என்பதால், பலரும் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை, ஜவுளி போன்றவற்றை வாங்க, உள்ளூரில் உள்ள கடைகளை விட்டு, மொத்த விலை கடைகளை தேடி, நகரங்களுக்கு செல்கின்றனர்.

முதல் கட்ட தகவல்கள்:



இதனால், உள்ளூரில் வணிகம் பாதிக்கப்படுவதுடன், நகரங்களில் வியாபாரம் இரு மடங்கு அதிகரித்து வருவது, அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வெற்றி பயணத்தின் கீழ், பெண்கள் பெரும்பாலான பஸ்களில் ஏறலாம், இறங்கலாம். இத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் குறித்து, அதிகாரிகள் வாயிலாக, அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைநகர் உட்பட மூன்று, நான்கு தாலுகாக்களில் மளிகை, ஜவுளி போன்றவற்றை விற்கும் பெரிய கடைகள் உள்ளன. அங்கிருந்து பொருட்களை வாங்கி, கிராமங்களில் கடைகளை வைத்துள்ள சிறு வணிகர்கள், மக்களிடம் விற்கின்றனர். கிராமங்களில் வசிக்கும் பலர், தங்களின் ஊர் பஜார்களுக்கு சென்று இந்த பொருட்களை வாங்குவர்.

பெரும்பாலான பஸ்களில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தால், தற்போது, கிராமங்களில் வசிக்கும் பெண்கள் ஐந்து, 10 பேர் ஒன்றாக சேர்ந்து, தங்கள் ஊரில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்காமல், நகரங்களுக்கு சென்று, அங்குள்ள பெரிய கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர்.

குடும்பத்துடன் பயணம்:



இதனால், குடும்ப செலவு மிச்சமாகி வருவதாக கூறுகின்றனர். இலவச பஸ் விரிவாக்கத்தால், உள்ளூர்களில் வணிகம் பாதிக்கப்பட்டு வருவதும், நகரங்கள், மாநகரங்களில் வியாபாரம் இரட்டிப்பாக்கி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கும், குடும்பத்துடன் பஸ்சில் செல்வதும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement