தூக்கு தண்டனை விதிப்பது ஏன்: சொல்கிறார் போக்சோ கோர்ட் நீதிபதி
திருநெல்வேலி:
திருநெல்வேலி அரசு சட்டக்கல்லுாரியில் 'செயற்கை நுண்ணறிவு, சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவியல் விசாரணைகளில் புதிய சவால்கள்' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.
போக்சோ நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:
சட்ட நுணுக்கங்களையும், தொழில்நுட்பத்தையும் தெரிந்து வழக்கறிஞர்கள் திறமையை வளர்க்க வேண்டும். மின்னணு ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள், சான்றிதழ் தொடர்பான விதிகளை உச்சநீதிமன்ற தீர்ப்பு வாயிலாக அறிந்து கொள்ள வேண்டும்.
மரண தண்டனை என்பது அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்க வேண்டும். சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் கொடூரமான குற்றங்களுக்கு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த தண்டனை வழங்கப்படுகிறது. சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து, அவரது வாழ்க்கையைச் சீரழிக்கும் குற்றங்கள் மிகக் கடுமையானவை.
மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள கல்வி, குடும்பம் உள்ளிட்ட வாய்ப்புகளை மதிக்க வேண்டும். சட்டத்துடன் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். போக்சோ நீதிமன்றங்களுக்கு நேரில் சென்று வழக்குகளின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.