ரூ.2.76 கோடி கோவில் நிலம் மீட்பு: மூன்று கடைகளுக்கு ‘சீல்’

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால், 2.76 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டு, மூன்று கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலின் உப கோவிலான, அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான குமாரபாளையம் அக்ரகாரம் கிராமம், வார்டு சி, பிளாக் 7, நகர அளவு எண் 1, 2, 3, 5 முதல் 12 -வரை உள்ள மூன்று இடங்களின் மொத்த பரப்பு, 6,901 சதுர அடி மனை குடியிருப்பு, வணிக நிறுவனமாக மாற்றப்பட்டது. சட்டவிரோதமாக, துறை அனுமதியில்லாமல் சந்திரசேகரன், நாகப்பன், கீதா, முருகன் ஆகியோர், நீண்டகாலமாக ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர்.

இந்நிலையில், ஈரோடு மண்டல இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் சந்திரனால் மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது. குமாரபாளையம் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள, மூன்று இடங்களின் மொத்த மதிப்பு, 2 கோடியே 76 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement