காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் பாதுகாக்கிறது :பரூக் அப்துல்லா பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

46

ஜம்மு: ''சர்வதேச அரங்குகளில் காஷ்மீர் பிரச்னையை தொடர்ந்து எழுப்புவதன் மூலம், ஜம்மு - -காஷ்மீர் மக்களை பாக்., பாதுகாத்து வருகிறது. நம் மக்களின் குறைகளை மத்திய பா.ஜ., அரசு கண்டுகொள்வதே இல்லை,'' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், அம்மாநிலத்தில் ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனருமான பரூக் அப்துல்லா, 89, பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று நடந்த அக்கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், கட்சியின் நிறுவனரும், முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தையுமான பரூக் அப்துல்லா பேசியதாவது:

நம் அண்டை நாடான பாகிஸ்தான் தான், ஜம்மு - காஷ்மீர் மக்களை பாதுகாத்து வருகிறது. அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், எங்கு சென்றாலும் காஷ்மீர் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை என, பேசுகிறார். அவர் தான் நம்மை பாதுகாத்து வருகிறார். இந்த விவகாரத்தில், மத்திய பா.ஜ., அரசின் எண்ணங்கள் நல்லதாக இல்லை.

மத்திய அரசிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் நீதி வழங்குவர் என, நம்புகிறீர்களா? நம் உரிமைகளுக்காக போராடும் துணிச்சலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நாம் கூண்டோடு அழிக்கப்படுவோம். நம் அடையாளமே முற்றிலுமாக மறைந்துவிடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் பா.ஜ., தலைவர் சத் சர்மா கூறியதாவது:

நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் இருப்பதால் தான், பரூக் அப்துல்லாவால் இவ்வளவு தைரியமாக பேச முடிகிறது. இதே பேச்சை அவர் பாகிஸ்தானில் பேசியிருந்தால், இந்நேரம் உயிரோடு இருந்திருக்க மாட்டார். நம் நாட்டில் காஷ்மீரி முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்.

பரூக் அப்துல்லாவின் பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது. நம் மண்ணில் இருந்து கொண்டு, சகல வசதிகளையும் அனுபவித்து வரும் அவர், பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குவது, மிகவும் கேவலம். இதற்காக அவர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை எனில், அவர் தாராளமாக பாகிஸ்தானுக்கு குடிபெயரலாம்.

Advertisement