கோர்ட் அவமதிப்பு வழக்கு கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

–நமது நிருபர்–: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாகை கலெக்டர், நான்கு வாரங்களில் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம், தகடூரை சேர்ந்த விவசாயி சரவணன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

எங்கள் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு, தகட்டூர் மின்சார நீர்பாசன திட்டத்தின் வாயிலாக, நீர்பாசனம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், 73 ஆண்டுகளுக்கு முன், நான்கு மின் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட்டன. இந்த பம்புகள் மற்றும் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.

இதனால், ஒரு காலத்தில் 1,500 ஏக்கரில் நடந்த விவசாயம், தற்போது, 75 ஏக்கராக குறைந்துள்ளது. இதுகுறித்து கோரிக்கை மனு அளித்த பின், ஒரு மோட்டார் பம்பு மட்டும் மாற்றப்பட்டது. 14 கிளை கால்வாய்கள் துார் வாரப்படவில்லை. அதேபோல, மூன்று மோட்டார் பம்புகளும் மாற்றப்படவில்லை. இதுதொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில், ‘மூன்று மோட்டார் பம்புகள், ஆறு மாதத்துக்குள் மாற்றப்படும். கிளை கால்வாய்களை துார்வாரி கரைகள் பலப்படுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த உயர் நீதிமன்றம், இந்த பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என, ஜன., 2ல் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதால், நீதிமன்றத்தை அவமதித்த நாகை கலெக்டர் பிரவீன்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் மதியழகன், மண்டல வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், தாசில்தார் ஜெயசீலன் ஆகியோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு, ‘மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர், நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

Advertisement