சவுதியில் சிக்கிய இந்தியர்களை மீட்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை

புதுடில்லி: சவுதி அரேபியாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய உம்ரா யாத்ரீகர்களை தாயகம் அழைத்து வர, விமான நிறுவனங்களுடன் இந்திய துாதரகம் பேசி வருவதாக நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சவுதி அரேபியாவுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.

இதனால், மெக்கா மற்றும் மதினாவுக்கு உம்ரா புனித யாத்திரை சென்ற 4,000 இந்திய முஸ்லிம் யாத்ரீகர்கள் அங்கு சிக்கி தவிக்கின்றனர். ‘அவர்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நம் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:

சவுதி அரேபியாவின் ரியாதில் உள்ள இந்திய துாதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் துாதரகமும், பாதிக்கப்பட்ட யாத்ரீகர்களை விரைவில் தாயகம் அழைத்து வர விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் தீவிரமாகப் பேசி வருகின்றன.

கடந்த வாரம் அங்கு தவித்த 3,000 உம்ரா யாத்ரீகர்கள் விமானங்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இது தவிர, முன்பதிவு செய்திருந்த 10,000க்கும் மேற்பட்ட உம்ரா யாத்ரீகர்களும் தாயகம் திரும்பியுள்ளனர்.

மற்ற யாத்ரீகர்களை விரைவில் அழைத்து வர தேவையான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக ரியாத்தில் உள்ள இந்திய துாதரகம், ஜெட்டா துணைத் துாதரகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. . மேலும் உதவிக்கு +966-554412016; +966-542126784 மற்றும் 8002471234 இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இது தவிர +966-536216082 என்ற எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பியும் தகவல்களை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement