சூப்பர் ரிப்போர்ட்டர்... பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்: ஆண்டிபட்டி வாரச்சந்தை ரூ.3.50 கோடியில் கட்டி கடைகள் வீணாகிறது

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வாரசந்தையில் சிறு வியாபாரிகளுக்காக 256 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டுமானப்பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கை தாமதமாகிறது. பணிகள் துவங்கி ஏழு ஆண்டுகளைக் கடந்த பின் தற்போது நிறைவடைந்துள்ளது. பணிகள் முடிந்த பின்பு பராமரிப்பின்றி வணிக வளாகத்தைச் சுற்றிலும் முள் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் பல ஆண்டுகளாக தகர கொட்டகைகளில் 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. கடைகளுக்கான மேடை தகர கொட்டகை சேதம் அடைந்ததால் வியாபாரிகள் வெயில், மழையால் பாதிப்படைகின்றனர். வியாபாரிகள்கொண்டு வரும் பொருட்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சந்தை வியாபாரிகள் மற்றும் தினசரி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு 2021–-22 ம் ஆண்டில் மூலதன மானியத் திட்டத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் 256 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டும் பணி ஏழு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்த பணி ஒரு வழியாக கட்டி முடிக்கப்பட்டது. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வாரச்சந்தையில் புதிய வணிக வளாகம் கொண்டுவரப்பட்டது. அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நடவடிக்கையில் பேரூராட்சி நிர்வாகம் என்ன காரணத்தினாலோ தாமதம் செய்கிறது. பொதுமக்கள் கூறியதாவது:

ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்காததால்





கட்டடம் ஒப்படைப்பதில் சிக்கல்





ஜான்சன், ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகரில் ரோட்டோரங்களில் 200க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளன. இவை நடை பாதை, முக்கிய இடங்களை ஆக்கிரமித்து அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் வாகனங்களில் சென்று திரும்ப முடியவில்லை. அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ கூட சென்றுவர முடியவில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் ரோட்டோர கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம், போலீசார் மேற்கொள்வதில்லை. பைபாஸ் ரோடு வசதி இல்லாத ஆண்டிபட்டியில் தினமும் போக்குவரத்து நெருக்கடியால் உள்ளூர் வாசிகளும், வெளியூர் வாகனங்களும் திணறுகின்றன. ரோட்டின் ஓரங்களில் ஆக்கிரமித்து கடைகள் அமைக்க வியாபாரிகளை அரசியல் கட்சியினர் ஊக்கப்படுத்துவதால் பேரூராட்சி நிர்வாகம், போலீசார் கடும் நடவடிக்கைக்கு தயங்குகின்றனர். பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வருவதால் ரோட்டோட கடைகளை அப்பகுதிக்கு மாற்றலாம். கட்டட ஒப்பந்ததாரருக்கு பேரூராட்சி பணம் நிலுவை இருப்பதால் கட்டடத்தை பேரூராட்சி கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. கடைகளை டெண்டர் விடுவதன் மூலம் பேரூராட்சிக்கு கிடைக்கும் வருவாயை வணிக வளாகஅடுத்த கட்டட பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.

ஆக்கிரமிப்பு கடைகளால் சிரமம்





செல்வம், ஆண்டிபட்டி: வாரச்சந்தை நாளில் அனைத்து கடைகளையும் ரோட்டில் அமைத்து விடுகின்றனர். கடைவீதி, நாடார் தெருவில் நடைபாதை முழுவதுமாக வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. அனைத்து கடைகளையும் வாரச் சந்தை வளாகத்திற்கு கொண்டு செல்வதால் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி குறையும். வார சந்தை வளாகத்தில் அனைத்து வாய்ப்பு இருந்தும் அதனை பயன்படுத்துவதற்கு பேரூராட்சி நிர்வாகம் முன் வரவில்லை.

வாடகை நிர்ணயம் செய்ய நடவடிக்கை





பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: வணிக வளாகத்தில் உள்ள 256 கடைகளையும் டெண்டர் விடுவதற்கு பேரூராட்சி கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்ய தபால் அனுப்பப்பட்டுள்ளது. வணிக வளாகத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ஆண்டிப்பட்டியில் ரோட்டின் ஓரங்களில் உள்ள அனைத்து கடைகளையும் வாரச் சந்தை வளாகத்திற்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Advertisement