திமுக ஆட்சியை போல் தவெக ஆட்சியிலும் வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பில்லை: சொல்கிறார் நயினார்

1

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவு;

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள், மேரி ரெஜிலா என்ற பெண்ணை வெட்டிக் கொன்று, அவரது கணவர் முத்துக்குிருஷ்ணன் மற்றும் மகனை உயிருக்கு ஆபத்தான வகையில் தாக்கிய கொடூரமும், கடத்திச் செல்லப்பட்ட அவர்களின் இரு மகள்கள் சில மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவமும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியின் போது வெளியில் சென்றால் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்ற அச்சம் நிலவியது. ஆனால், தவெக ஆட்சியில் கதவைச் சாத்திவிட்டுத் தங்கள் சொந்த வீட்டிற்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களுக்கும், பச்சிளம் பெண் குழந்தைகளுக்கும் கூடத் துளியும் பாதுகாப்பில்லாத பேரவலம் அரங்கேறி வருகிறது.

இதேபோல் தான், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் பெற்றோர் அருகில் உறங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மாயமாகிப் பல நாட்கள் கடந்தும், இதுவரை அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல் தவெக அரசின் காவல்துறை திணறி வருகிறது.

பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் மெத்தனப் போக்கைத் தொடர்ந்து சகித்துக் கொள்ள முடியாது. சாத்தான்குளம் தாய்க்கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் மிக கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, நடந்த தவறுகளை உணர்ந்து தவெக அரசு உடனடியாகத் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

Advertisement