தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக டில்லியில் பேரணி 100க்கும் மேற்பட்டோர் கைது

2

புதுடில்லி: எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை திரும்பப் பெறவும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரியும் டில்லியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்று (அக்.,23) பேரணி நடத்தினர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுதும் தேர்தல் கமிஷன் சார்பில் முன்னெடுக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் போர்க்கொடி துாக்கி வருகின்றனர்.

சம்யுக்த் கிசான் மோர்ச்சா, மாணவர் அமைப்புகள், இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் ஒருங்கிணைந்து டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனின் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதையொட்டி கோல் டாக் கானா அருகே பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி விலகக்கோரியும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். அங்கு வைத்திருந்த தடுப்புகளை மீறி செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement