ஊட்டியில் சிக்கித்தவித்த 150 மாணவர்கள் மீட்பு; தமிழக அரசுக்கு நன்றி கூறிய கேரளா
திருவனந்தபுரம்: ஊட்டியில் சிக்கித்தவித்த 150 கேரள மாணவர்களை மீட்ட தமிழக தீயணைப்புத் துறைக்கு, அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தாலா நன்றி தெரிவித்து உள்ளார்.
வட கிழக்கு பருவமழையால் நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. பர்லியார் பகுதியில் அரசு பஸ் மண் சரிவில் சிக்கியதில் அதன் டிரைவர் பலியானார். கண்டக்டர் உயிர் தப்பினார். நீலகிரியில் பலத்த மழை எதிரொலியாக, சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. 2 நாட்கள் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மண் சரிவின்போது சிக்கித்தவித்த 150 கேரள மாணவர்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை அறிந்த அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, நன்றி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பதிவில் அவர் கூறி உள்ளதாவது.
ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவு காரணமாக கேரளாவைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் சிக்கித்தவித்தனர். அவர்களை, துரிதமாகவும் வீரத்துடனும் மீட்ட தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றிகள்.
உயிர்களை காப்பதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் கடமை உணர்வு ஆகியவை மிகுந்த மரியாதைக்குரியவை ஆகும்.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா குறிப்பிட்டுள்ளார்.