புத்தக வாசிப்பு சமூகத்தை புரிந்து கொள்ள உதவும்

திண்டுக்கல்:

‘நீண்ட, தொடர் புத்தகங்கள் வாசிப்பு சக மனிதர்களை, சமூகத்தை அதன் இயல்பில் புரிந்து கொள்ள உதவும்’ என 2ம் நாள் புத்தகத் திருவிழாவில் கவிஞர் சாம்ராஜ் பேசினார்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கியக் களம் சார்பில் 13வது புத்தகத் திருவிழா அங்குவிலாஸ் பள்ளி மைதானத்தில் 2ம் நாளான நேற்று நடந்தது.

வாங்கினேன், வாசித்தேன், சொல்கிறேன் என்ற தலைப்பில் மாணவர்கள் படித்த புத்தகங்கள் குறித்து எடுத்துரைக்கும் நிகழ்ச்சி காலையில் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு ஆங்கில மொழி திரைப்படமான சாம்மெடெஸின் 1917 ஒளிபரப்பப்பட்டது.

மாலை நடந்த சிந்தனை அரங்கத்தில் ‘அறிவினால் ஆகுவதுண்டோ’ என்ற தலைப்பில் எழுத்தாளர் லட்சுமணப் பெருமாள் பேசினார். தொடர்ந்து கவிஞர் சாம்ராஜ் வாசித்தே தான் தீர வேண்டுமா என்ற தலைப்பில் பேசியதாவது:

கலை என்பது ஆதி மனிதன் குகையில் வரைந்த கற்கால ஓவியம் முதல் இன்று மேடை பேச்சு வரை பல்வேறு பரிமாணங்களில் பயன்பாட்டில் உள்ளது. இவை பேச்சு, நடனம், ஓவியம், திரையிசை, மொழி, பாடல் வடிவங்களில் எல்லாம் உள்ளது. எழுத்தாளர் லட்சுமண பெருமாள் ‘தீ’ சிறுகதை எழுதியுள்ளார். அதை வாசித்தால் வாசிப்பும், பண்பும் உங்கள் வசமாகும். நீண்ட, தொடர் புத்தக வாசிப்பு இருந்தால் மட்டுமே சக மனிதர்களை, சமூகத்தை அதன் இயல்பில் உங்களால் புரிந்து கொள்ள முடியும்’ என்றார்.

Advertisement