விளைநிலங்களில் என்.எல்.சி., மண் குவியல் தேக்கம்: கம்மாபுரம் அருகே விவசாயிகள் மறியல்

விருத்தாசலம்: கம்மாபுரம் அருகே, விளைநிலங்களில் மண் குவியல் தேங்கியதை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவன, 2வது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண், கொம்பாடிக்குப்பம், ஊத்தங்கால், கம்மாபுரம், சு.கீனனுார் கிராமங்களில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு, சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் முழுதும் மண் சரிந்து, பயிர்கள் நாசமடைவது வழக்கமாக உள்ளது. அதன்படி, 3 நாட்களாக பெய்து வரும் மழைக்கு, என்.எல்.சி., மண் மேட்டில் இருந்து கரைந்து வெளியேறிய சவுட்டு மண் கலந்த தண்ணீர், சம்பா சாகுபடி செய்த விளைநிலங்களில் மூழ்கியது. இதனால் சுமார், 1,000 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக மூழ்கி, விளைநிலங்கள் மண் மேடாக மாறும் அபாயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், விருத்தாசலம் – பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலையில், சு.கீனனுார் பஸ் நிறுத்தம் அருகே, மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சம்பா பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விளை நிலங்களில் தேங்கிய மண்ணை அப்புறப்படுத்தி, சாகுபடி செய்யும் அளவிற்கு நிலத்தை திருத்தி தர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்த கம்மாபுரம் சப் – இன்ஸ்பெக்டர் கொளஞ்சி தலைமையிலான போலீசார் வந்து பேச்சு நடத்தி, விவசாயிகளை கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில், 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.

தகவலறிந்த தாசில்தார் முருகன், பாதித்த வயல்களை நேரில் பார்வையிட்டு, தேங்கி மழைநீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

Advertisement