இரட்டை கொலையில் தொழிலாளிக்கு ஆயுள்: விழுப்புரம் மகிளா கோர்ட்டில் தீர்ப்பு

விழுப்புரம்: செஞ்சி அருகே, கள்ளத்தொடர்பில் இருந்த, இரு பெண்களை கொலை செய்த வாலிபருக்கு, விழுப்புரம் மகிளா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த, பெரும்புகை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 39. தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் குப்புசாமி மனைவி குட்டியம்மாள், 45, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த உறவு, தேவேந்திரனின் மனைவிக்கு தெரிந்து பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 2019ம் ஆண்டு ஜன., 18ல் குட்டியம்மாள், பெரும்புகை மேற்கு மலை கல் குவாரி அருகே, தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அங்கு சென்ற தேவேந்திரன், குட்டியம்மாளை கத்தியால் வெட்டினார். இதில், மயக்கமடைந்த குட்டியம்மாளை, துாக்கிச் சென்று, அருகில் இருந்த மலைப்பாறைகள் இடுக்கில் துாக்கிப்போட்டு கொலை செய்தார். அதிலிருந்து தப்பிக்க அங்கிருந்த கற்களை போட்டு உடலை மூடி மறைத்துள்ளார்.

செஞ்சி போலீசார், 25ம் தேதி வழக்குப் பதிந்து, தேவேந்திரனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், தேவேந்திரன் மேலும் ஒரு பெண்ணை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையில், வல்லம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மனைவி சுமதி, 38, என்பவருக்கும் தொடர்ப்பு இருந்துள்ளது. இவர்களின் தொடர்பு தேவேந்திரன் மனைவி கலைச்செல்விக்கு தெரிந்ததால், அவர் தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், தன்னை விட்டு பிரிந்து செல்லுமாறு தேவேந்திரன் கூறியதற்கு சுமதி மறுத்துள்ளார்.

இதையடுத்து, ஊரணி தாங்கல் முசுடு மலைக்கு சுமதியை வரவழைத்து, அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து, உடலை தன் மொபைல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை தொடர்ந்து, சுமதியின் உடலை மலையின் பின்பக்கம் உள்ள பாறை இடுக்கில் போட்டு மறைத்து, கற்களை வைத்து மூடி வைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து செஞ்சி போலீசார் குட்டியம்மாள், சுமதி ஆகியோரை கொலை செய்ததாக தனித்தனியாக தேவேந்திரன் மீது வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குற்றஞ்சாட்டப்பட்ட தேவேந்திரனுக்கு, இரு வழக்கிலும் ஆயுள் தண்டனை மற்றும், 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement