முதல்வருக்காக பிரமாண்டமாக தயாராகும் அரசு பங்களா; வெற்றி இல்லம் என பெயரிட முடிவு

13

- நமது நிருபர் -

முதல்வர் விஜய்க்காக, சென்னையில் பிரமாண்டமாக அரசு இல்லம் தயாராகி வருகிறது.

கடந்த மே 10ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். அன்று முதல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் இருந்து தான், தலைமை செயலகம் வந்து செல்கிறார்.

முதல்வர் வந்து போகும், 18 கி.மீ., சாலையில், வழிநெடுக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அலுவல் நேரம் முடிந்து, வீட்டுக்கு செல்லும் முன், தன் பட்டினம்பாக்கம் வீட்டில், சிறிது நேரம் முதல்வர் தங்குவார்.

அதோடு, அந்த வீட்டை முகாம் அலுவலகமாகவும் முதல்வர் விஜய் பயன்படுத்தி வருகிறார். அதிலும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால், அரசு பங்களாவை பயன்படுத்த, முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார்.

அதன்படி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள, 'எழில் இல்லம்' முதல்வருக்காக புது பொழிவுடன் தயாராகி வருகிறது. குறிப்பாக, வீட்டு வளாகத்துக்குள் உடற்பயிற்சி கூடம், பேட்மிண்டன் மைதானம், காவலர்கள் தங்கும் கூடம், நடைபாதை, புல் தரைகள் மற்றும் ஐந்தாறு பேர் அமரும் வகையிலான கூட்டரங்கம் உள்ளிட்டவையுடன், மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

இந்த கூட்டரங்கங்களில், முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், ஆலோசனை கூட்டங்கள் நடத்த, வசதிகள் செய்யப்படுகின்றன. வழக்கமாக அரசு பங்களாவை சீரமைக்கும் பணியில், பொதுப்பணித் துறை தான் ஈடுபடும்.

ஆனால், முதல்வர் விஜய் வசிக்கவிருக்கும் இல்லத்தை, தனியார் வாயிலாக, அவருக்கு பிடித்த வகையில் வடிமைத்து வருகிறார் என கூறப்படுகிறது. எனவே தான், இந்த பணிகளுக்கு, 'டெண்டர்' எதுவும் இதுவரை கோரப்படவில்லை.

அதோடு, 'எழில் இல்லம்' என்ற பெயரை, 'வெற்றி இல்லம்' எனவும் மாற்ற உள்ளனர். இல்லத்துக்கான சீரமைப்பு பணிகள் முடிந்த பின், அடுத்த மாதம் முதல்வர் விஜய் அங்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வசிக்கும் குறிஞ்சி இல்லத்தில் இருந்து, நான்கு வீடுகள் தள்ளி இருக்கிறது. முதல்வரின் வீட்டை சுற்றி, அமைச்சர்கள் நிர்மல்குமார், செங்கோட்டையன், வெங்கட்ரமணன் உள்ளிட்டோரின் பங்களாக்களும் இருக்கின்றன. இந்த இல்லத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக இருந்த தியாகராஜன் வசித்து வந்தார்.

Advertisement