இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.80 லட்சம் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதை பொருள், மருந்து, மாத்திரைகள் கடத்தப்படுகின்றன. இதை தடுக்கும் நோக்கில் மண்டபம் வேதாளை கடற்கரையில் க்யூ பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு டூவீலரில் வந்த இருவரை பிடிக்க முயன்றனர். அப்போது டூவீலரை போட்டுவிட்டு இருவரும் தப்பினர். இதனால் சந்தேகத்தின் பேரில் அப்பகுதி முழுவதும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது கடற்கரையோரம் மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.80 லட்சம். டூவீலரில் வந்த இருவரே மாத்திரைகளை பதுக்கி வைத்த பின் தப்பியதாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரையும் போலீசார் தேடுகின்றனர்.

531 கிலோ சுக்கு பறிமுதல்





இதேபோல் நேற்று அதிகாலை புதுமடம் கடற்கரையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது புதுமடம் கிராமத்தின் குப்பை மேடு பகுதியில் நின்ற படகில் சிலர் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசார் விசாரிக்க சென்ற போது படகில் இருந்தவர்கள் தப்பினர்.

படகில் 18 மூடைகளில் 531 கிலோ சுக்கு, 4 மூடைகளில் 1500 மஞ்சள் பாக்கெட்டுகள் இருந்தது. போலீசார் அவற்றை கைப்பற்றி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Advertisement