பறவைகள் சரணாலயப்பணி 4 ஆண்டுகளாக முடக்கம்
திருப்பூர்: தமிழகத்தின், 17-வது பறவைகள் சரணாலயமாக, 2022 ஏப்., 24-ல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்., 12-ல் அரசாணை வெளியிடப்பட்டு, 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அறிவிப்பு வெளியாகி, 4 ஆண்டுகள் கடந்தும், அடிப்படை கட்டமைப்புகள் முழுமை பெறவில்லை.
திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறுகையில், ‘‘அறிவிப்பு வெளியானதும், முதல் இரண்டு ஆண்டுகள், எல்லை நிர்ணயம், ஆக்கிரமிப்பு சரிபார்த்தல் போன்ற நிர்வாக பணிகளும், அடுத்த, இரண்டு ஆண்டுகளில் பார்வையாளர்களுக்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
‘‘ஆனால் நிர்வாக பணிகள் மட்டுமே ஓரளவு முடிந்துள்ளது. தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டும், மத்திய அரசின் ‘26 ஏ’ அறிவிப்பாணை வராததே தாமதத்துக்கு காரணம். அறிவிப்பாணை வந்தால் தான், முழு வீச்சில் பணிகள் தொடங்கும்,’’ என்றார்.