கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை

கரூர்:கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்தது.

கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 23, அரவக்குறிச்சி, 37, அணைப்பாளையம், 4.60, க.பரமத்தி, 1.80, குளித்தலை, 16, தோகைமலை, 11.20, கிருஷ்ணராயபுரம், 21, மாயனுார், 36, பஞ்சப்பட்டி, 9.60, கடவூர், 21, பாலவிடுதி, 20, மயிலம்பட்டி, 15 என, மாவட்டம் முழுவதும், 216.20 மி.மீ., மழை பெய்தது.
* மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 2,490 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 4,216 கன அடியாக அதிகரித்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு, 4,086 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 230 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
500 ஏக்கர் நெல் வயல் மூழ்கியது
குளித்தலை அருகே புலியூர், வீரராக்கியம், கட்டளை, பால்ராஜபுரம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழையால், கட்டளை பகுதியில், 500 ஏக்கர் நெல் நடவு செய்த வயல்கள் தண்ணீரில் மூழ்கியும், 1,000 ஏக்கர் நடவு செய்யவுள்ள நெல் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Advertisement