ராணுவ ரகசியங்கள் கசிவு; முன்னாள் ராணுவ அதிகாரி கைது

2

வேலுார்: வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 52. இவர் 28 ஆண்டுகளாக ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றினார். கடைசியாக கடந்த ஆண்டு ராணுவ தளவாட பிரிவில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

கீழ்வல்லத்தில் வசிக்கும் பாபு, பெண் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் ராணுவ தளவாடங்கள் தொடர்பான ரகசிய தகவல்களை அனுப்பியுள்ளார். தெரியாத தகவல்களை ராணுவத்தில் விசாரித்து அந்த பெண்ணுக்கு ஓராண்டாக அனுப்பி வந்துள்ளார்.

அவரது இந்த செயல்பாடு, ராணுவ உளவுப்பிரிவினரால் கண்டறியப்பட்டது. வேலூர் கீழ்வல்லத்தில் உள்ள பாபுவின் வீட்டுக்கு வந்த உளவுப்பிரிவு அதிகாரிகள், அவரை வேலூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணை முடிந்த நிலையில் அவரை வேலூர் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் கூறுகையில், ''மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள் முன்னாள் ராணுவ அதிகாரியான பாபுவிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அவரது செல்போன் வாட்ஸ் அப் எண்ணில் ஒரு பெண்ணிடம் பேசிவந்துள்ளார். அந்த பெண் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்து முழு தகவல் தெரியவில்லை. தொடர்ந்து வேலூர் தாலுகா போலீசாரின் விசாரணை நடக்கிறது,'' என்றனர்.

Advertisement