ஏனாத்துாரில் மேம்பாலம் கட்டும் பணி மந்தம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

வாலாஜாபாத்: ஏனாத்துார் பகுதியில், மேம்பாலம் கட்டும் பணி மந்தமாக நடப்பதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நான்கு வழி சாலை, ஆறு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணி மற்றும் ஏனாத்துார், வேடல், ராஜகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த மேம்பாலம் கட்டுவதற்கு, மாற்றுபாதை அமைத்து விட்டு மேம்பாலங்களை கட்டி வருகின்றனர். இந்த பணி மந்தமாக நடப்பதால், சென்னையில் இருந்து பெங்களூரு மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

குறிப்பாக, ஏனாத்துார் தனியார் மருத்துவமனை முதல், வேடல் கூட்டு சாலை வரையில், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், இந்த 2 கி.மீ., துாரம் சாலையை கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது என, வாகன ஓட்டிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், அவசர தேவைக்கு சென்னையில் இருந்து வேலுார் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர், மேம்பாலங்கள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement