சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம் கும்பாபிஷேகம் கோலாகலம்

கரூர்: கரூர் மாவட்டம் நெரூர், காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம், விசாலாட்சி அம்மன் ஆலய புனரமைப்பு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, மஹா கும்பாபிஷேக விழா இன்று (அக்.,25) நடந்தது.

கடந்த, 23ல் கும்பாபிஷேக விழா தொடங்கி, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, 6:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது.

காலை, 9:30 மணிக்கு மங்கள வாத்தியம், வேத மந்திரம் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று, ராஜகோபுரம், விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement