திரைப்பட நிறுவன மேலாளர் ‘போதை’ வழக்கில் சிக்கினார்

விருகம்பாக்கம்: சாலிகிராமத்தில் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் பயன்படுத்திய, 31 வயதுடைய சினிமா தயாரிப்பு நிறுவன மேலாளர், 29 வயதுடைய ஐ.டி., ஊழியர் உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

சாலிகிராமம், தனலட்சுமி காலனி முதல் தெருவில் உள்ள சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில், மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த, ஈக்காட்டுத்தாங்கல்லைச் சேர்ந்த கவுசிக், 31, என்பவரை, போதை பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவின் வடக்கு மண்டல போலீசார் நேற்று பிடித்தனர். அவர், சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் என்பது தெரியவந்தது.

சினிமா துறையைச் சேர்ந்த நண்பர் வாயிலாக அறிமுகமான அபினேஷ், 33, என்பவரிடம், போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி வந்ததாக கவுசிக் தெரிவித்தார். இதையடுத்து, அபினேஷையும் போலீசார் கைது செய்தனர்.

அவரது தகவலின்படி புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியர் சந்திரசேகர், 29, என்பவரும் பிடிபட்டார். மூவரிடமும் 6.84 கிராம் மெத்ஆம்பெட்டமைன் போதை பொருளை, போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement