விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: மரத்தில் கார் பாய்ந்ததால் பரபரப்பு

வானுார்: வானுார் அருகே, பைக் மீது, கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

அரக்கோணத்தை சேர்ந்த இளம்பரிதி, 26; எல்எல்பி., படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சேதுராமன், 25; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள், இருவரும் இன்று (அக்.,27) புதுச்சேரிக்கு வந்துள்ளனர். பின் மாலை 3;30 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக தார் காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். இந்த காரை இளம்பரிதி ஓட்டி சென்றார்.

மாலை 4;00 மணிக்கு, இந்த கார், தேற்குணம் சந்திப்பு அருகில் சென்றபோது, எதிரே அதே திசையில் சென்ற பைக், திடீரென வலதுபுறமாக சாலைக்கு ஏறியுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், பைக்கில் சென்ற இருவர் மீதும் மோதியது.

மோதிய வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார், 200 மீட்டர் துாரத்திற்கு, பாய்ந்து சென்று, தேற்குணம் சாலையை கடந்து சாலையோரமாக இருந்த ஒதிய மரத்தின் மீது, மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பைக்கில் சென்ற, திண்டிவனம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராமசாமி மகன் பழனிசாமி, 43; என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக்கில் அமர்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் ஏழுமலை, 55; என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காரில் வந்த இளம்பரிதி, சேதுராமன் ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்த கிளியனுார் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயமடைந்த ஏழுமலையும், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் குறித்து கிளியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரத்தால் பலர் தப்பினர்





புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், தேற்குணம் சந்திப்பில் பிசியான டீக்கடை உள்ளது. இங்கு மாலை நேரங்களில் ஏராமானோர் அமர்ந்து டீ குடிப்பது வழக்கம். இன்று மாலையும், அதே போன்று அந்த டீக்கடையில் ஏராளமானோர் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்ட வேகத்தில் கார் 200 மீட்டர் துாரத்திற்கு கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக ஓடி, ஒதிய மரத்தில் மோதி கவிழ்ந்தது. அதன் அருகில் தான் இந்த டீக்கடை உள்ளது. மரம் இல்லை என்றால், அந்த கார் டீக்கடைக்குள் புகுந்து இருக்கும். இந்த மரத்தால் அதிர்ஷ்டவசமாக பலர் உயிர் தப்பினர். இது மட்டுமின்றி, விபத்து நடந்த போது, தேற்குணம் சாலை சந்திப்பில் யாரும் இல்லாததும் குறிப்பிடத்தக்கது.

தொடரும் விபத்துக்கள்





புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் வந்து செல்கின்றன. வேகத்தின் காரணமாக கடந்த 10 தினங்களில், இந்த சாலையில் தனித்தனியாக நடந்த சாலை விபத்துகளில் (இன்று உட்பட) 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக கிளியனுாரில் இருந்து இரும்பை சாலை வரை உள்ள பகுதியில் தான் இந்த அனைத்து விபத்துக்களும் நடந்துள்ளன. அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் தான், இந்த விபத்துக்கள் நடப்பதற்கு காரணம். இந்த சாலையில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தி கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement