என்.எல்.சி., தொழிற்சங்க கூட்டமைப்பினரின் வேலை நிறுத்த நோட்டீஸ் கோரிக்கை மனுவாக மாறியது

நெய்வேலி: என்.எல்.சி.,யில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு வழங்கினர்.

என்.எல்.சி.,யில் பணியாற்றிவரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் லாபத்தில் பங்கு என்பதன் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் ஒரே கட்டமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தை உடனே உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யு., உள்ளிட்ட 10 சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று என்.எல்.சி., நிர்வாகத்திடம் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா திடலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் என்.எல்.சி., தலைமை அலவலகத்தை நோக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி பைக்கில் ஊர்வலமாக சென்றனர்.

நேரு சிலை அருகே சென்ற தொழிலாளர்களை டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. பின்னர், கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் 20 பேரை மட்டும் போலீசார் என்.எல்.சி., தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மனிதவளத்துறை அதிகாரிகளிடம் தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் சி.ஐ.டி.யூ., அல்லாத இதர 9 தொழிற்சங்கத்தினரும் தங்களது வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டிசுக்கு மாறாக, இரவு 7.45 மணிக்கு மனுவாக வழங்கினர். சி.ஐ.டியூ.,வினர் மட்டும் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.

Advertisement