தி.மு.க., நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்கலை பேராசிரியர் குறித்து புகார்

ஓமலுார்: தி.மு.க., விழாவில் பங்கேற்ற பல்கலை பேராசிரியர் குறித்து, முன்னாள் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் புகார் அளித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலையில், பொருளியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பேராசிரியர் வைத்தியநாதன். இவர், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர், நேற்று பெரியார் பல்கலை பதிவாளர் (பொ) ராஜூவிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இதழியல் துறை பேராசிரியராகவும், கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் சுப்ரமணி. இவர் கடந்த அக்.,15ல், தற்செயல் விடுப்பு எடுத்து, அதே நாளில் பெரம்பலுாரில் தி.மு.க., துணை பொதுச்செயலாளர் தலைமையில் நடந்த படத்திறப்பு விழாவில் பங்கேற்று, தான் தி.மு.க.,உறுப்பினர் என்றும், தி.மு.க.,வுடனான தொடர்பை பொது வெளியிலும் வெளிப்படுத்தியது என்பது, பல்கலை சாசன விதிகளை மீறிய செயலாகும்.பல்கலை நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கிலும், அரசு ஊழியரின் பொறுப்பை மீறியும், அரசியல் மேடையில் உரையாற்றி, எம்.பி., ராஜாவை தன்னிச்சையாக சந்தித்து உரையாற்றி வந்துள்ளார். முந்தைய தி.மு.க., ஆட்சியில் இவர் கலைஞர் ஆய்வு மைய இயக்குனராகவும், ஆட்சிக்குழு உறுப்பினராகவும், கட்சி உறுப்பினர் என்பதால் நியமிக்கப்பட்டார். எனவே சுப்ரமணியை, உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, உயர் மட்ட விசாரணை குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement