ஹிந்து அல்லாதவரை கோவிலுக்குள் அனுமதித்தால் புனிதத்தன்மை சீர்குலையும்: உயர் நீதிமன்றம் காட்டம்
மதுரை:மதுரை, தங்கம் வெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றின் மீது, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:ஆகம முறைப்படி அமைந்த கோவில்களின் வளாகத்திற்குள், ஹிந்துக்கள் அல்லாதவர்கள் நுழையலாமா? உண்மையில் இவ்விவகாரம் ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒன்று. கடந்த 1972ல் நீதிபதி டி.ராமபிரசாத ராவ், 2024ல் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் ஏற்கனவே இக்கேள்விக்கு விடை அளித்துள்ளனர்.
விதிவிலக்கு
சமீபத்தில் சில நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, மனுதாரர் இந்த அமர்வின் மூலம் தெளிவான தீர்ப்பு பெற விரும்புகிறார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், 'தொடர்புடைய சட்டங்கள், விதிகளில் உள்ள நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன. அவை தொடர்ந்து பின்பற்றப்படும்' என தெரிவித்த போதிலும், நாங்கள் இவ்விவகாரத்தில் ஒரு தீர்ப்பை வழங்குகிறோம்.
காசி போன்ற வட மாநில கோவில்களில் எந்தவொரு ஹிந்து பக்தரும், சிவலிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்ய முடியும். ஆனால், இங்கு நிலைமை அவ்வாறில்லை. ஆகம கோவில்களில் சிவாச்சாரியார்கள், தீட்சிதர்கள், பட்டர்கள் அல்லது பூசாரிகளாக பணியாற்றுபவர்களை தவிர, மற்ற எந்த ஹிந்துக்களும் கருவறைக்குள் நுழைய அனுமதியில்லை.ஒருவர் பிராமணராக இருந்தாலும், அவரும் கருவறையின் நுழைவாயிலிலேயே நிற்க வேண்டும். பிராமணர்களை பற்றிய இத்தகவலை தவறான உள்நோக்கத்துடன் அணுக தேவையில்லை; அனைத்து சமூகத்தினரும் ஒரே நிலையில் தான் உள்ளனர்.
ஜாதி படிநிலையில் பிராமணர்கள் உச்சத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், கோவிலின் மரபுகள், வழக்கங்கள், அவர்களையும் கருவறைக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. கும்பாபிஷேகம் நடைபெறும் தருணத்தில் மட்டும் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.பழனி கோவிலுக்குள், 'பர்தா' அணிந்த, சில ஹிந்து அல்லாத நபர்கள் நுழைய முயன்றதையடுத்து, ஒரு வழக்கு தொடரப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் அவர்களை தடுத்தபோது,பழனி கோவில் ஒரு சுற்றுலா தலம் என வாதிடப்பட்டது.இதை நிராகரித்த தனி நீதிபதி, கோவில் என்பது சுற்றுலா தலமோ, பொழுதுபோக்கு இடமோ அல்ல என குறிப்பிட்டார். ஹிந்து அல்லாத ஒருவருக்கு நம்பிக்கை இல்லையெனில், அவரை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதி மறுக்கும் போது, அவர்களின் உணர்வுகள் புண்படுவதாக கருத இடமில்லை என அவர் தெரிவித்தார்.
சட்டம் இவ்வளவு தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தும், சமீபகாலமாக இதில் கடும் மீறல்கள் நடைபெறுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., பத்ருதீன் முஸ்தபா, அக்கோவில் வளாகத்திற்குள் சென்றார்.அங்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்ய தனக்கு உரிமை இருப்பதாக தெரிவித்தார். கும்பாபிஷேகத்தின் போது, அவர் கோவில் கோபுரங்களின் மீதும் ஏறினார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கோஷமிட்ட அவர், கோவிலுக்குள் சென்றது முரண்பாடான ஒன்றாக உள்ளது.
மத நடைமுறைகள்
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர், ஹிந்துக்கள் அல்லாதவர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய உறுதிமொழியை அளிக்காமலேயே, திருச்செந்துார் கோவிலுக்குள் நுழைந்தார். தமிழக முதல்வர் விஜய், அத்தகைய உறுதிமொழியில் கையொப்பமிட்ட பின், மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்ட சிறந்த உதாரணம், நம் கண் முன்னே உள்ளது.கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த முதல்வரிடம், ஹிந்து மதத்திற்கு மாற வேண்டும் என்று யாரும் கோரவில்லை; மாறாக வழிபடும் கடவுள் மீது அவருக்குள்ள மரியாதையை உறுதிப்படுத்த மட்டுமே கேட்டுக் கொள்ளப்பட்டார்.
காஞ்சி மகா பெரியவரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறோம். வெளிநாட்டினரோ அல்லது பிற மதத்தைச் சேர்ந்தவர்களோ ஹிந்து மதத்தை தழுவ விருப்பம் தெரிவித்தபோது, அவர்களை தடுத்தது மட்டுமின்றி, மாறாக அவர்கள் தங்கள் சொந்த மதத்தின் மீது அதிக விசுவாசத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில், மகா பெரியவரை சந்திக்க சென்றபோது, அவரது உணர்வுகளை மதிக்கும் வகையில், பெரியவர் அவருக்கு விபூதிக்கு பதிலாக சந்தனத்தை பிரசாதமாக வழங்கினார்.
ஒரு எம்.எல்.ஏ.,- அமைச்சர் உள்ளூர் கோவிலுக்கு வருகிறார் என தெரிந்தால், கட்சி தொண்டர்கள் எப்படி நடந்து கொள்வர் என்பதை எளிதில் யூகிக்கலாம். உற்சாகத்தில் தாங்கள் அந்த இடத்திற்குள் நுழைய அனுமதி உள்ளதா, இல்லையா என யோசிக்காமல், அவரை பின்தொடர்ந்து உள்ளே நுழைந்து விடுவர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தொப்பிகளை அணிந்த சிலர், பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி உள்ளே நுழைய முயற்சித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியது. அப்போது, அறநிலையத்துறை ஊழியர்கள் வெறும் பார்வையாளர்களாகவே நின்று கொண்டிருந்தனர்.
அறநிலைய சட்டப் பிரிவின்படி, அத்துறையின் கமிஷனர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.
அதே சட்டத்தின் மற்றொரு பிரிவு, பணியாற்றும் அதிகாரிகள் கூட, ஒரு வழிபாட்டு தல வளாகத்திற்குள் நுழையும் போது,அங்குள்ள மத நடைமுறைகள் அல்லது வழக்கங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என குறிப்பிடுகிறது.
உரிமை உண்டு
மற்றொரு பிரிவு, ஹிந்து அல்லாத ஒருவர் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள வளாகத்திற்குள் அல்லது இடத்திற்குள் நுழைவதற்கு அனுமதி அளிப்பதாக கருதப்படக்கூடாது என கூறுகிறது.மனுதாரர் ஒரு ஹிந்து. தமிழகத்திலுள்ள ஆகம கோவில்களின் அறங்காவலர்கள் ஆகம விதிகளின்படி உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிடாத ஹிந்து அல்லாத நபர்கள், கொடி மரத்தை தாண்டிச் செல்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்த உரிமை உண்டு.
அவ்வாறு அவர்களை உள்ளே நுழைய அனுமதித்தால், அது கோவிலின் புனிதத்தன்மையை சீர்குலைக்கும். நாங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று கூறுகிறோம். தங்களின் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில், மத சின்னங்களை அணிந்து, சம்பந்தப்பட்ட கடவுள் மீதான தங்கள் மரியாதை, பக்தியை உறுதிப்படுத்தாத ஹிந்துக்கள் அல்லாத நபர்களை, கோவில் வளாகத்திற்குள் நுழையக்கூட அனுமதிக்க முடியாது.
இத்தகைய உறுதிமொழியானது, சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள படிவத்தில் அளிக்கப்பட வேண்டும். மனு அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.
அதோடு இந்து கடவுள்களின் மீது மட்டும் நம்பிக்கை இல்லாத நாத்திக நடிகர்களும் உள்ளே நுழைய தடை விதிக்க வேண்டும். அவர்கள் மட்டும் கோவிலுக்குள் நுழைந்து என்ன நன்மை செய்துவிட போகிறார்கள்?
ஏதோ ஒரு திட்டத்துடன் கோவில்களை ஆக்கிரமிக்க எல்லோரும் ஒன்று சேர்ந்தது சதி திட்டம் தீட்டியுள்ளனர் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. இந்துக்கள் ஏமாளியாக இருக்கும் வரை இது சாத்தியமே.மேலும்
-
ஊர்வலத்துக்கு தடை உட்பட 10 நிபந்தனைகள்; நவம்பர் 1ல் 'இண்டி' கூட்டணி போராட்டத்துக்கு அனுமதி
-
அவசர காலத்தில் மருத்துவ செலவுக்கு உதவிய ‘தினமலர்’ நாளிதழுக்கு நன்றி: ரைஸ் மில் தொழிலாளி நெகிழ்ச்சி
-
டி.வி.நல்லுார் அருகே சிறுமியை கடத்த முயற்சி? வடமாநில வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
-
வானுார் அருகே நடந்த கொலை வழக்கில் 6 பேர் கைது: பணம் தர மறுத்ததால் தீர்த்து கட்டினோம்
-
ஒடும் பஸ்சில் 12 சவரன் கொள்ளை: மூதாட்டியிடம் மர்ம நபர்கள் கைவரிசை
-
கஞ்சா விற்ற வாலிபர் கைது