அரசு மருத்துவமனையில் ‘பிறக்கும்’ டெங்கு கொசுக்கள்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை ரத்தப்பரிசோதனை நிலையம் முன்பாக உள்ள காலியிடத்தில் தேங்கி கிடக்கும் மழைநீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.

டீன் அலுவலக முதல் மாடியில் உள்ள அனைத்து வார்டுகளின் மேற்பகுதியில் மழைநீர் கசிந்து வார்டின் காரிடாரில் தண்ணீர் சொட்டுகிறது. டாக்டர், நர்சிங் மாணவிகளுக்கான ‘சிக் ரூமில்’ மழைநீர் கசிந்து தரையில் தேங்கி நிற்கிறது. ரத்தப்பரிசோதனை மையம் அருகிலுள்ள காலியிடத்தில் மழைநீர் தேங்கி நின்று டெங்கு கொசு உற்பத்தி மையமாக உள்ளது. மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான வளாகத்தின் தரைப்பகுதியிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. அக்., நவ.,ல் டெங்கு கொசுக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்யும் என்பதால் மாவட்டம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மருத்துவ அதிகாரிகள் கூறுகையில் ‘முதல்தள மாடியின் இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசிகிறது. ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை மூலம் மராமத்து செய்தாலும் பிரச்னை தீரவில்லை. பாரம்பரிய கட்டடங்களை பழுதுபார்க்கும் சிறப்பு குழுவினருக்கு ஏற்பாடு செய்துள்ளோம். மழைக்காலம் முடிந்தபின் மராமத்து செய்ய திட்டமிட்டுள்ளோம். தரைத்தளங்களில் மழைநீர் வெளியேற்ற வழிசெய்துள்ளோம்’ என்றனர்.

@block_B@

4 பேருக்கு டெங்கு



மதுரையில் நேற்று ‘ப்ளூ’ வகை காய்ச்சலுக்கு 40 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு 112 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு 13 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.block_B

Advertisement