அரசு மருத்துவமனை உணவில் என்னவென்று தெரியாத வாசம்: யார் சொன்னது என்கிறார் ஆர்.எம்.ஓ.,

கோவை: அரசு மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகளுக்கு, மூன்று வேளை உணவு, காலை, மாலையில் பால், ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது.

அன்றாடம் என்னென்ன உணவு வினியோகிக்கப்படுகிறது என்ற உணவு பட்டியல் அனைத்து வார்டுகளிலும் அறிவிப்பாக ஒட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, ‘மெனு’ மாற்றப்பட்டது. அதிக நேரம் வேகவைக்கப்படும் சுண்டலும் சப்பாத்தியும், வழங்கப்படவில்லை. தற்போது காஸ் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லாத சூழலிலும், பழைய மெனு மாற்றப்படவில்லை.

மாலையில் ஸ்நாக்ஸாக, பச்சைபயறும், சோயாவையும் மட்டுமே அடிக்கடி மாற்றித் தருவதாக புகார் எழுந்தது. தாமதமாக உணவு தருவதோடு, சாப்பாடு, உப்புமா ஆகியவற்றில் நாற்றம் வீசுவதாக நோயாளி ஒருவர் வெளியிட்ட ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

அந்த ஆடியோவில்,‘ சாப்பாடு, உப்புமாவில் ஒருவித நாற்றம் வீசுகிறது. நீண்டநாட்கள் ஸ்டாக் வைத்திருந்தாலோ, முறையாக கழுவாமல் இருந்தாலோ அந்த நாற்றம் வரும். இதை பலரும் வாங்கி குப்பையில் கொட்டுகின்றனர்.

முட்டையும், பாலும் தாமதமாகவே கிடைக்கிறது. சுவையே இல்லை. வழியின்றி பலரும் சாப்பிடுகின்றனர். நன்றாக சமைத்து தந்தால், உணவு வீணாகாமல் தடுக்கலாம்’ என அவர் பேசியுள்ளார்.

ஆர்.எம்.ஓ., சரவணபிரியாவிடம் இது பற்றி நமது நிருபர் கேட்டார். அதற்கு அவர், ‘‘சிலிண்டர் தட்டுப்பாடு தற்போது இல்லாததால், ஸ்நாக்ஸ் மெனுவில் கூடுதலாக சுண்டல், பயறு வகைகள், காலை, இரவு டிபனில், சப்பாத்தியும் சேர்க்க முடிவெடுத்துள்ளோம். சில நேரங்களில் கால தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இனி அதுபோன்ற புகார் வராமல் பார்த்து கொள்கிறோம்.

ஆனால், உணவு தரமாக இல்லை என்பதை ஏற்க முடியாது. நானும், டீனும் கிச்சனில் சமைத்ததை அவ்வப்போது சாப்பிடுகிறோம். நன்றாகவே இருக்கிறது. இனி உணவு சார்ந்த புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம். உடனே சரி செய்யப்படும்’’ என்றார்.

Advertisement