ஒரே மேடையில் மஹா., முதல்வர் பட்னவிஸ், தாக்கரே சகோதரர்கள்; பா.ஜ.,வின் கூட்டணி கணக்கு மாறுகிறதா?

3

மும்பை: மஹாராஷ்டிர சட்ட மேல்சபை தேர்தல் தோல்விகளை தொடர்ந்து, ஆளும், 'மஹாயுதி' கூட்டணியில், பா.ஜ., - துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா இடையே மோதல் நீடிக்கும் நிலையில், மும்பையில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில், தாக்கரே சகோதரர்களுடன், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஒரே மேடையில் பங்கேற்றது, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், பா.ஜ.,வின் கூட்டணி கணக்கு மாறுகிறதா என்ற விவாதமும் சூடுபிடித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் மஹாயுதி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியும், மற்றொரு துணை முதல்வர் சுநேத்ரா பவாரின் தேசியவாத காங்., கட்சியும் அங்கம் வகிக்கின்றன.

மஹாராஷ்டிர சட்ட மேல்சபையில், காலியாக உள்ள ஐந்து இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், காங்., - உத்தவ் சிவசேனா கட்சி, தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சி அடங்கிய, 'மஹா விகாஸ் அகாதி' கூட்டணி, மூன்று இடங்களையும், ஆளும் கூட்டணி இரண்டு இடங்களையும் கைப்பற்றியது.

எதிர்க்கட்சியை விட குறைவான தொகுதிகளையே கைப்பற்றியதால், ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பா.ஜ., - சிவசேனா இடையே வார்த்தைப் போர் நீடிக்கிறது. சிவசேனா தங்களுக்கு உரிய ஒத்துழைப்பு தரவில்லை என்றும், சில தொகுதிகளில் துரோகம் செய்து எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்கு உதவியதாகவும் பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நவநாத் பான் குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த சிவசேனா செய்தித் தொடர்பாளர் ஆனந்த் பரஞ்சபே, 'கூட்டணியை கலந்து ஆலோசிக்காமல், பா.ஜ., தன்னிச்சையாக வேட்பாளர்களை நிறுத்தியதே தோல்விக்கு காரணம். கூட்டணி கட்சிகளுக்கு அக்கட்சி உரிய மரியாதை தருவதில்லை' என்றார். சட்ட மேல்சபை தேர்தல் தோல்வியால், பா.ஜ., - சிவசேனா இடையே பனிப்போர் நிலவுகிறது.

இந்த சூழலில், மும்பையில் உள்ள சாவர்க்கர் நினைவகத்தில், மராத்தி கார்ட்டூனிஸ்டுகளின் வரலாற்றை விவரிக்கும், 'மஹாராஷ்டிராச்சியா ஹாஸ்யரேஷா' என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து பங்கேற்றனர்.

இந்த விழாவுக்கு இடையே, மூன்று பேரும் தனி அறையில் அரை மணி நேரம் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.

விழாவில் பேசிய முதல்வர் பட்னவிஸ், ''2019க்கு முன், உத்தவ் தாக்கரே எப்போது அழைத்தாலும் அவரை சந்திக்க செல்வேன். 2019க்கு பின், அவர் என்னை அழைக்கவில்லை. அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன்,'' என்றார். இதன் மூலம், பா.ஜ., கூட்டணியில் இணைய வரும்படி உத்தவ் தாக்கரேவுக்கு அவர் மறைமுகமாக அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

சட்ட மேல்சபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து, பா.ஜ., - சிவசேனா இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆகிய விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே அதிருப்தி நிலவுகிறது.

இந்நிலையில், தாக்கரே சகோதரர்களுடன் முதல்வர் பட்னவிஸ் மேடையை பகிர்ந்து கொண்டது, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய கூட்டணி கணக்கை பா.ஜ., தொடங்குகிறதா என்ற விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மொத்தம், 288 எம்.எல்.ஏ.,க்கள் உடைய மஹாராஷ்டிர சட்டசபையில், ஆளும் மஹாயுதி கூட்டணிக்கு, பா.ஜ., 132; சிவசேனா 57; தேசியவாத காங்., 41 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சிவசேனாவை கூட்டணியில் இருந்து பா.ஜ., கழற்றி விட்டாலும், ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

@block_B@

2019ல் பிரிந்த கூட்டணி



மஹாராஷ்டிராவில், 2019 சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ஒருங்கிணைந்த சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டு வென்றன. முதல்வர் பதவி விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதால், காங்., -- ஒருங்கிணைந்த தேசியவாத காங்கிரசுடன் இணைந்து, உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்தார். 2022ல், சிவசேனாவில் பிளவு ஏற்பட்டு, ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பிரிந்து, பா.ஜ., ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். தற்போது, மஹாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக உள்ளார். இதற்கிடையே, பல ஆண்டுகளாக அரசியல் எதிரிகளாக இருந்த உத்தவ், ராஜ் தாக்கரே ஆகியோர், மீண்டும் நெருக்கம் காட்டி வருகின்றனர்.block_B

Advertisement