பாண்டியாறு – மோயாறு இணைப்பு திட்டம் கேரள முதல்வரிடம் பேச விஜய்க்கு கோரிக்கை

ஈரோடு: பாண்டியாறு – மோயாறு இணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில், முதல்வர் விஜய்க்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த, 1965 முதல், பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் என்ற பாண்டியாறு – மோயாறு இணைப்பு திட்டம் விவாதிக்கப்படுகிறது. இந்த நதிகள் இணைக்கப்பட்டால் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் என, நான்கு மாவட்டங்களில், ஒரு கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், ஐந்து லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடியை தொடர்ந்து மேற்கொள்ளவும், கோடிக்கணக்கில் கால்நடைகள், லட்சக்கணக்கான வேளாண் தொழிலாளர்களுக்கு திட்டம் பலன் தரும்.

நீலகிரி மாவட்டம், தேவாலா பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகள், தமிழக எல்லை தாண்டி கேரளாவில் நுழைந்து, புன்னம்புழா என ஓடி, சாலியாற்றில் சேர்ந்து அரபி கடலில் வீணாக கலக்கிறது.

இந்த ஆறு, கேரளாவில் நுழையும் முன், தமிழக எல்லையில் ஒரு அணை கட்டி, அதில் இருந்து தண்ணீரை பம்பிங் செய்து அல்லது சுரங்கம் மூலம் பவானி நதியின் கிளை ஆறான மோயாற்றில் கலக்க வைத்து, பவானிசாகர் அணையில் சேர்ப்பது திட்டமாகும்.

இதுபற்றி முன்பு கேரளா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கடந்த, 1968ல் மத்திய திட்டக்குழுமம் இதற்கு ஒப்புதல் வழங்கியது. 1965ல் தொடங்கி, 10க்கும் மேற்பட்ட முறை, இரு மாநிலங்களுக்கு இடையே ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடந்த, 2004, 2019ல் இரு மாநில முதல்வர்கள் பேச்சு நடத்தினர். கடந்த, 2020 செப்., 11ல் அரசு செயலர்கள் மட்டத்திலும், 2021 செப்., 17ல் அதிகாரிகள் மட்டத்திலும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதன்பின், கேரள அரசின் தொழில்நுட்ப ஒப்புதலுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இதுபற்றி முதல்வர் விஜய், கேரள முதல்வரிடம் பேசி தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Advertisement