'மாருதி' நிறுவனத்தின் இயக்குநராக காங்., சோனியா 'நியமிக்கப்பட்டது எப்படி?': பா.ஜ., கேள்வி

புதுடில்லி: 'வெளிநாட்டு குடியுரிமை வைத்திருந்த போது, 'மாருதி' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், 50 சதவீத பங்குதாரராகவும் காங்., - பார்லி., குழு தலைவர் சோனியா நியமிக்கப்பட்டார். அப்போதைய பிரதமர் மறைந்த இந்திரா தலைமையிலான அரசு, விதிகளை மீறி அவருக்கு சலுகைகளை வழங்கியது' என, பா.ஜ., - லோக்சபா எம்.பி., நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டினார்.

ஜார்க்கண்டின் கோட்டா லோக்சபா தொகுதியின் பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, 'காங்கிரசின் இருண்ட அத்தியாயம்' என்ற தலைப்பில், அக்கட்சி பற்றி சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் நேற்று வெளியிட்ட பதிவு:

வெளிநாட்டு குடியுரிமை வைத்திருந்த போதும் சோனியா, மாருதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், 50 சதவீத பங்குதாரராகவும் இருந்தது உங்களுக்கு தெரியுமா? இந்திய அரசின் விதிகளின்படி, வெளிநாட்டவர் ஒருவர் இந்திய நிறுவனத்தின் இயக்குநராக முடியாது என்ற நிலையில், 1970ல் அவர் எப்படி இயக்குநரானார்?

விசாரணை



காங்கிரசைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் மகன் சஞ்சயின் மாருதி கார் திட்டம் தொடர்பாக, 1977ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில், சோனியாவுடன் தொடர்புடைய, 'மாருதி டெக்னிக்கல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் பங்கு குறித்தும் கேள்விகள் எழுகின்றன.

கடந்த 1970 நவ., 21ல், சோனியாவின் மாருதி டெக்னிக்கல் சர்வீசஸ் நிறுவனத்துடன் சஞ்சய் ஒப்பந்தம் செய்தார். 1970ல் நிறுவனம் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பே, 1968ல் கார் தயாரிக்க மத்திய அரசு அனுமதி கடிதம் வழங்கியது எப்படி? 1969ல், அப்போதைய பிரதமர் இந்திரா, தன் மருமகள் சோனியாவுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு கார் தயாரிக்க அனுமதி அளிக்கும் வகையில் அமைச்சரவை உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த 1972 ஏப்., 3ல், அந்நிறுவனத்துக்காக மத்திய அரசின் செலவில் உலகம் முழுதும் சஞ்சய் பயணம் செய்தார். அப்போது, பிரதமர் அலுவலகமும் இந்நிறுவனத்தை உருவாக்குவதில் பங்கு வகித்தது. இந்திராவின் நெருங்கிய உதவியாளரும், தனி செயலருமான ஆர்.கே.தவானும் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். ஒரு தனியார் நிறுவனத்தின் அலுவலகம் பிரதமர் அலுவலகத்தில் எப்படி செயல்பட்டது? பிரதமரின் தனி செயலர் ஒருவர் நிறுவனத்தின் இயக்குநரானது எப்படி?

ஹரியானா அரசின் விதிகளின்படி, வெளிநாட்டு குடியுரிமை கொண்டவரின் பெயரில் நிலம் ஒதுக்க முடியாது. அப்படியிருக்க, 1970ல் சோனியாவுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது எப்படி? வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கம், காந்தி குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது தானா?

மாருதி நிறுவனம் முழுமையாக செயல்பட தொடங்குவதற்கு முன்பே, பஸ் மேற்கூரை கட்டுமான பணிகளுக்காக மாநில அரசுகள் முன்பணம் வழங்க அறிவுறுத்தப்பட்டன.

சலுகை



அரசு நிறுவனங்கள், மாருதி நிறுவனத்துக்கு சிமென்ட், இரும்பு, நிலக்கரி ஆகியவற்றை பணம் பெறாமலேயே நேரடியாக வழங்கியது எப்படி?

தன் சுயசரிதை புத்தகத்தில் உண்மை தகவல்களை சோனியா மறைத்துள்ளார். சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், இவ்வளவு பெரிய நிறுவனத்தை எப்படி உருவாக்கினார் என்பதையும், தன் மாமியார் இந்திரா மாருதி நிறுவனத்துக்கு அளித்த சலுகை குறித்தும் சுயசரிதையில் அவர் விளக்கியிருக்க வேண்டும். மாருதி நிறுவனத்தின் உரிமையாளராக சோனியா மாறிய விதம், நேஷனல் ஹெரால்டு விவகாரம் உள்ளிட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் விதமாக, அவரை பற்றி நான் ஓர் உண்மையான புத்தகத்தை எழுதப் போகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு காங்., தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

Advertisement