'வரதட்சணைக்காக பெண்கள் தற்கொலைக்கு துாண்டப்படுவது நம் சமூகத்தின் அவமானம்': டில்லி உயர் நீதிமன்றம் வேதனை

2

புதுடில்லி: 'வரதட்சணைக்காக பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்படுவதும், தற்கொலைக்கு துாண்டப்படுவதும், நம் ஒட்டுமொத்த சமூகத்தின் அவமானம்' என, டில்லி உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

டில்லியில், திருமணமான இரு ஆண்டுகளிலேயே சோனியா என்ற இளம்பெண், 2001ல், புகுந்த வீட்டில் தீக்குளித்து உயிரிழந்தார். இருசக்கர வாகனம், கேஸ் அடுப்பு மற்றும் 25 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தியதாக, பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில், கணவர் ஜெய்தேவ், அவரது தந்தை மற்றும் சகோதரருக்கு டில்லி நீதிமன்றம் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், 2004ல் கணவர் வீட்டார் மேல்முறையீடு செய்தனர். 25 ஆண்டு கால வழக்கில், தனி நீதிபதி விமல் குமார் யாதவ் அளித்த தீர்ப்பு:

திருமணம் என்பது இரு தனிநபர்கள் மற்றும் இரு குடும்பங்களின் இணைப்பாக இருந்த போதும், வரதட்சணை கொடுமையால் மணப்பெண் கொல்லப்படுவதும், தற்கொலைக்கு தள்ளப்படுவதும் அருவருக்கத்தக்கது. மற்ற சமூகங்களில் இல்லாத இந்த கொடுமை நம் சமூகத்தில் பரவலாக உள்ளது. இது, ஒட்டுமொத்த சமூகத்தின் அவமானம்.

ஒரு பெண் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எதிர்நோக்கியும் தன் புகுந்த வீட்டிற்குள் நுழைகிறாள். ஆனால், அவள் துன்புறுத்தப்படும் போதும், பெற்றோரிடமிருந்து வரதட்சணையை வாங்கி வரும்படி வற்புறுத்தப்படும் போதும், அவளது கனவுகள் சிதைந்து போகின்றன. பிறந்த வீட்டை விட்டு விட்டுத் தன்னை நம்பி வரும் மனைவியை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது, ஒவ்வொரு கணவரின் கடமை.

இந்த வழக்கை பொறுத்தவரை, போதிய ஆதாரங்கள் இல்லாததால், ஜெய்தேவின் தந்தை மற்றும் சகோதரரை விடுவிக்க வேண்டும். அதே சமயம், ஜெய்தேவ் மீதான வரதட்சணை குற்றச்சாட்டை மாற்றி, மனைவியை தற்கொலைக்கு துாண்டியது, கொடுமைப்படுத்தியதற்காக, அவரை குற்றவாளி என, அறிவிக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Advertisement