கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்: ஐகோர்ட் நீதிபதி பரபரப்பு பேச்சு

2

- நமது நிருபர் -:

''கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஒரு எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார். அது, பணியிடத்தில் துன்புறுத்தல் இல்லையா? கலெக்டரின் கணவர் புகார் கொடுத்துள்ளார். இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது,'' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை அலுவலர்களுக்கு, பாலின உணர்திறன் மற்றும் உள்ளக புகார் குழு சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மதுரை லேடி டோக் கல்லுாரியில் நேற்று நடந்தது.

நீதிபதி ஆர். பூர்ணிமா வரவேற்றார்.

நீதிபதி அனிதா சுமந்த் பேசியதாவது:

ஒவ்வொருவரும் சமத்துவத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்ட ஒரு சமூகம் நமக்கு தேவையில்லை. ஆண் - பெண் எவ்வித அச்சம், தயக்கமின்றி ஒரே அறையில், ஒரே மேஜையில் சமமாக அமர்ந்து உரையாடக்கூடிய சமூகம் நமக்கு தேவை. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். நன்கு படித்த ஆண், பெண்களுக்கு கூட பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்ற தெளிவு இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பேசியதாவது:

பாலியல் வன்கொடுமையோ, துன்புறுத்தலோ நடந்தால், அதை நாம் எவ்வாறு கையாள்வது, புகார் கொடுக்க யாரை அணுகுவது என்பது அனைத்து ஊழியர்களுக்கும் தெரியுமா என்றால் கேள்விக்குறிதான். கடந்த, 1988ல் பஞ்சாபில் நடந்த ஒரு விருந்தில், பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரூபன் தியோல் பஜாஜ் பங்கேற்றார்.

அவரிடம், அப்போது டி.ஜி.பி.,யாக இருந்த கே.பி.எஸ்.கில் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கில்லுக்கு மாவட்ட நீதிமன்றம், 6 மாதம் சிறை தண்டனை விதித்தது. அதை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

குற்றத்தை உறுதி செய்து, கில்லை நன்னடத்தை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டது.

எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது, குற்றத்தை உறுதி செய்து, ரூபன் தியோல் பஜாஜிற்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. கில், சிறையில் வைக்கப்படவில்லை.

மனம் வெறுத்து போன ரூபன் தியோல் பஜாஜ், 2 லட்சம் ரூபாயை ஒரு பெண்கள் அமைப்புக்கு கொடுத்தார். ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் நிலை அது. கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஒரு எம்.எல்.ஏ., ஆபாச செய்தி அனுப்பினார்.

அது, பணியிடத்தில் துன்புறுத்தல் இல்லையா? கலெக்டரின் கணவர் புகார் கொடுத்துள்ளார். இன்றுவரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்,

நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.விஜயகுமார், முன்னாள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement