பல்லடம் நகர த.வெ.க. செயலாளர் நீக்கம்
பல்லடம்: பல்லடம் நகர த.வெ.க., செயலாளர் ராமமூர்த்தி, கட்சிப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
த.வெ.க. திருப்பூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சங்கர், பல்லடம் எம்.எல்.ஏ., ராம்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக ராமமூர்த்தி தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதையடுத்து, பொதுச்செயலாளர் ஆனந்தின் உத்தரவின்படி, நகரச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமமூர்த்தி தரப்பினர் கூறுகையில், ‘‘மாவட்டச் செயலாளர் செய்த தவறுகளை கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ஆனால், கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராமமூர்த்தி செயல்பட்டதாகக் கூறி, விவகாரம் திசைதிருப்பப்பட்டுள்ளது. நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராமமூர்த்தி நீக்கப்பட்டது தொடர்பாக கட்சித் தலைமையிலிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. இதுகுறித்து கட்சித் தலைமையிடம் முறையிட உள்ளோம்’’ என்றனர்.