‘மகளை கோவிலில் விட்டு விடுங்கள்’ காணாமல் போன சிறுமி தாய் உருக்கம்

செஞ்சி: ‘எனது மகளை கடத்தியிருந்தால் கோவிலில் விட்டு விடுங்கள்’ என செஞ்சி அருகே காணாமல் போன சிறுமியின் தாய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வடிவேல் – பவானி தம்பதி. இவர்களின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர்12ம் தேதி மாயமானார்.

சிறுமியை மீட்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் பெற்றோர், எதிர்வீட்டுப் பெண், சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 8 பேரின் மொபைல் போன்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிறுமியின் தாய் பவானி கண்ணீர் மல்க கூறியதாவது:

எனது மகள் ஹேமலதா மாயமாகி இன்றுடன் 42 நாட்களாகி விட்டது. அவள் எங்கே இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை. மகளைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் நாங்கள் அனைவரும் பசியோடும், பட்டினியோடும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

எனது மகளை யாராவது கடத்தி சென்றிருந்தால், அவர்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனது மகளை என்னிடம் கொண்டு வந்து ஒப்படைத்து விடுங்கள்.

உங்களால் எங்களிடம் நேரடியாகக் கொடுக்க முடியாவிட்டால், ஏதாவது ஒரு கோவிலில் கொண்டு வந்து விட்டுச் செல்லுங்கள். அங்குள்ளவர்கள் எனது மகளைப் பார்த்து எங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

எனவே, யாராவது எனது மகளை அழைத்துச் சென்றிருந்தால், தயவுசெய்து எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கண்கலங்கியபடி தெரிவித்தார்.

Advertisement