‘கொடை’யில் அதிகரிக்கும் பனியின் தாக்கம்
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப் பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் முன்கூட்டியே நீர் பனி விழத்தொடங்கியுள்ளது.
வழக்கமாக டிசம்பர் முதல் வாரத்தில் பனிக்காலம் துவங்கும். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை சரிவர பெய்யாத நிலையில் சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் கோடையை மிஞ்சும் அளவிற்கு வெளுத்து வாங்குகிறது. பகலில் 22 டிகிரி செல்சியஸ், இரவில் 9 முதல் 11 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. இதையடுத்து மாலை 4:00 மணிக்கு பனியின் தாக்கம் அதிகரித்து கடுங்குளிர் நிலவுகிறது. காலையில் மரம், செடி, கொடிகளில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் ஜிம்கானா, கீழ் பூமி, அப்சர்வேட்டரி, மன்னவனுார் புல்வெளியில் நீர் பனியுடன், லேசான உறைபனியும் நீடிக்கிறது. முன்கூட்டியே துவங்கிய பனியால் விவசாய பாசனம், குடிநீர் தட்டுப்பாடு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.