ரேஷன் அரிசி கடத்தல் மில் உரிமையாளர் கைது
விழுப்புரம்: மரக்காணத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய மாவு மில் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தப்படுவதாக, விழுப்புரம் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், போலீசார், மரக்காணம், மாரியம்மன் கோவில் தெருவில் சோதனை செய்தனர். அங்கு, ஒரு மாவுமில் எதிரே நின்றிருந்த மகேந்திரா ஜிப்ரோ ஆம்னி வேனில் 17 மூட்டைகளில் 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், மாவு மில் உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் அரவிந்த்குமார், 33; என்பவருடையது என தெரியவந்தது.
இவர், மரக்காணம் மற்றும் அங்குள்ள கிராம மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, தனது மாவு மில்லில் அரைத்து சுற்று வட்டாரங்களில் உள்ள பேக்கரிக்கு அதிக விலைக்கு விற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அரவிந்த்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, ரேஷன் அரிசி மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.