ரோட்டோரத்தில் குப்பை குவிப்பு தொட்டிகள் அமைக்க கோரிக்கை
வால்பாறை: வால்பாறையில், முக்கிய இடங்களில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை உள்ளிட்ட கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் கவர்க்கல் வியூபாயின்ட், நல்லமுடி காட்சிமுனை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, சின்னக்கல்லாறு அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், குப்பை உள்ளிட்ட கழிவுகளை வீசிச்செல்கின்றனர்.
இதனால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சுற்றுலா பயணியர் மது அருந்திவிட்டு, சாலையோரம் பாட்டில்களை வீசுகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘சுற்றுலா பயணியர் அதிக அளவில் செல்லும் இடங்களில், நகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். நாள் தோறும் குப்பையை நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்ற வேண்டும். சுற்றுலா தலங்களில் மது அருந்துபவர்களை வனத்துறையினர் கண்டறிந்து, அபராதம் விதிக்க வேண்டும்,’ என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘குப்பையை ரோட்டோரத்தில் வீசக்கூடாது என, பல முறை சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து சாலையோரம் வீசிச்செல்கின்றனர். நகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.