ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தேங்கும் கழிவுநீர்
சாத்துார்: சாத்துார் அருகே தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கோட்டை சுவர் அருகே தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு ஏற்படுவதால் கழிவுநீரை அகற்றி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும் இங்கு பிரசவ கால சிகிச்சையும் பிரசவத்திற்கு பிறகு குழந்தைகள் பராமரிப்பு தாய் நல விடுதியும் செயல்பட்டு வருகிறது.
நோயாளிகள் பலர் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் அருகில் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் நோயாளிகள் மட்டும் இன்றி சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் அவதிப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கழிவுநீர் தேங்குவதை தடுத்து நிறுத்துவதோடு அந்தப் பகுதியை சுகாதாரமாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.