‘ கூடுதல் தொகுப்பு வீடு கட்டும் திட்டம் 2029 வரை நீட்டிப்பு’: பழங்குடியினர் பயன்பெற நடவடிக்கை
ஊட்டி.: தொகுப்பு வீடுகள் கூடுதலாக கட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு , 2029 ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் ஊட்டி , குன்னூர் , கோத்தகிரி , குந்தா , கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்கா பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றன.
நீலகிரியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் என்பது இந்திய அரசாங்கத்தின் முதன்மையான கிராமப்புற வீடு கட்டும் திட்டமாகுக. இத்திட்டம் அனைவருக்கும் வீடு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட இத்திட்டத்தை கூடுதலாக வீடுகள் கட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு , 2029 ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சிறப்பு திட்டங்கள் வாயிலாக பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் , மாவட்ட முழுவதும் பழங்குடியினருக்கு , 550 தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலும் கூடலூர் , பந்தலூர் பகுதிகளில் அதிக அளவில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் , 269 ச.அ ., கொண்ட கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. ஒரு ஹால் , படுக்கையறை , சமையலறை , கழிப்பறை ஆகியவை இதில் இடம் பெற்றிருக்கும்.
பணியை விரைப்படுத்தணும்
ஊட்டி , கூடலூர் வட்டத்தில் ஆனைகட்டி , பொக்காபுரம் , கோத்தகிரி கடினமலை , கோப்பையூர் சுற்று வட்டார பகுதிகளின் பழங்குடியினருக்கு தொகுப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட இப்பணி சில இடங்களில் தொய்வடைந்திருப்பதாக பழங்குடியினர் குற்றச்சாட்டுகின்றனர். இப்பணிகளை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு விரைவுப்படுத்த வேண்டும் என , பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பழங்குடியின மக்கள் கூறுகையில் , அரசின் தொகுப்பு வீடு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கு வீடு கட்ட நிலம் ஏதும் இல்லாததால் ஒரு வீட்டில் பலர் வசிக்கும் நிலையால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சொந்த நிலம் வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்டுவதற்கும் , இடமில்லாதவர்களுக்கு வீட்டு மனையுடன் இலவச வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ' என்றனர்.