சம்பா சாகுபடி நிலத்தில் மாணவிகளுக்கு பயிற்சி
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் பகுதியில் திருச்சி வேளாண்மைக் கல்லுாரி மாணவிகள் கிராம புற வேளாண்மை அனுபவப் பயிற்சி மேற்கொள்கின்றனர். திருச்சி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மாணவிகள் தனிஷிகா தலைமையில் தனுஸ்ரீ, தாரணி, தர்ஷினி, தர்ஷினிபிரியா, துர்கா, இளந்தளிர், ஞானதர்ஷினி, கோகிலா, குகப்பிரியா, ஹரிதாரணி ஆகியோர் கொண்ட குழுவினர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கிராம புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
வேளாண் படிப்பு மாணவிகள் சேத்தியாத்தோப்பு அடுத்த மழவராயநல்லுாரைச் சேர்ந்த இயற்கை விவசாயி செல்வம், தனது வயலில் பாரம்பரிய நெல் விதைகள் மூலம் பல்வேறு நிறம் கொண்ட நெல் நாற்றுகள் மூலம் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நெல் நடவு ஓவியம் செய்துள்ளதை பார்வையிட்டனர்.
அதற்கான விளக்கங்களை கேட்டறிந்தனர். மேலும் விவசாயி செல்வம், தன்னிடம் உள்ள 35 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும், சாகுபடி முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் சம்பா சாகுபடியில் களை கட்டுப்படுத்துதல் குறித்த பயிற்சி மேற்கொண்டனர். குணவாசல் கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தலைவர் சரவணனுடன், வேளாண் மாணவிகள், வயல்வெளியில் மேற்கொள்ளப்படும் வேளாண் நடைமுறைகள் குறித்தும், விவசாயிகளின் சாகுபடி செயல்பாடுகள் அனுபவம், வேளாண் தொழில்நுட்பம், வேளாண்மை தொழிலில் முக்கிய பணிகள் போன்ற குறித்து கலந்துரையாடினார்கள்.