விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய சமூக வலைதளத்தில் பிரசாரம்
விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆடியோ பதிவு செய்து வேளாண் துறை நுாதன விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்ட பயிர் காப்பீடு குறித்த ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், கூறியிருப்பதாவது:
விவாசயம் என்பது வெறும் தொழில் மட்டும் அல்ல, குடும்பத்தின் வாழ்வாதாரம். உழைப்பு, வருமானம், குடும்பத்தின் எதிர்காலம் அனைத்தும் பயிரோடு இணைந்திருக்கிறது.
ஆனால், எவ்வளவு சிறப்பாக சாகுபடி செய்தாலும், இயற்கையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதிக மழை, வெள்ளம், வறட்சி, புயல், நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்களால் நாம் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படக்கூடும்.
அதுபோன்ற எதிர்பாராத இழப்புகளில் இருந்து விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கும் முக்கியமான வழி தான் பயிர் காப்பீடு. விவசாயம் நமது உழைப்பு, பயிர் காப்பீடு நமது பாதுகாப்பு. ஒரு பருவத்திற்காக நாம் செய்யும் சாகுபடி செலவு மற்றும் உழைப்பை நினைத்துப் பாருங்கள்.
இயற்கை இடரால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும் நிதிச் சுமையை குறைக்க காப்பீடு உதவக்கூடும். இயற்கை இடர் வருமா, வராதா என்று தெரியாது. ஆனால், அதற்கான நிதி பாதுகாப்பை நாம் முன்கூட்டியே ஏற்படுத்த வேண்டும்.
எனவே, விவசாயிகள் வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் சம்பா பருவ நெல்லுக்கு காப்பீடு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்து, பாதுகாப்புடன் விவசாயம் செய்யுங்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வேளாண் துறையின் இந்த நுாதன விழிப்புணர்வு பிரசாரம் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.