ஸ்பெயினை திணறடித்த கேப் வெர்டே தீவு தேசம்; எங்கே இருக்கிறது தெரியுமா?

2


உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆச்சர்யம், பலரும் அறிந்திடாத ஒரு ஆப்ரிக்க குட்டி நாடு, ஸ்பெயின் அணியை திணறடித்தது தான்.


கால்பந்து அரங்கில் ஸ்பெயின் ஒரு வல்லரசு என்றால் அது மிகையில்லை; அந்த அணி முன்னாள் உலக சாம்பியன். சாகசம் செய்து பந்தை கடத்தி கோலாக்கும் மந்திரம் கற்ற வீரர்கள் பலர் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.


அத்தனை பேரையும் திணறடித்தது அந்த குட்டி நாடு கேப் வெர்டே. இப்படி ஒரு நாடு இருப்பதே உண்மையில் பலருக்கும் தெரியாது. ஆப்பிரிக்காவின் மேற்கு கரையில் மத்திய அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள குட்டித்தீவு தான் இந்த கேப் வெர்டே.


மொத்தம் 2 தீவுக்கூட்டங்களை கொண்டது இந்த நாடு. பர்லவென்டோ, சொடவென்டோ என்பவை அந்த தீவுக்கூட்டங்கள். தலைநகரின் பெயர் பிரய்யா. ஆப்பிரிக்காவில் இருந்தாலும் இது முன்னேறிய நாடு. அதுவும் ஜனநாயக நாடு. மொத்த மக்கள் தொகை 5 லட்சத்துக்கும் குறைவு. மக்கள் போர்ச்சுக்கீசிய மொழி பேசுகின்றனர்.


இன்று நடந்த போட்டியில் கேப் வெர்டே அணியின் கோல் கீப்பர் வொஸிங்கா, 40, சீனப்பெருஞ்சுவர் போல நின்று ஸ்பெயின் வீரர்களின் கோல் முயற்சிகளை தடுத்தார்.
ஸ்பெயின் அணியின் மார்க் குகுரெல்லா, பெட்ரி, ரோட்ரி, யமல் ஆகியோரின் அடுத்தடுத்த கோல் முயற்சிகள் அனைத்தும் வொஸிங்காவின் முன் தவிடுபொடியாகின.
ஐரோப்பிய சாம்பியன் ஆன ஸ்பெயின் அணி, போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி வீரர்கள், 734 முறை பந்தை பாஸ் செய்தனர். எதிர் அணியான கேப் வெர்டே வீரர்களுக்கு 205 முறை மட்டுமே பாஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.


கோல் போஸ்டை நோக்கி, ஸ்பெயின் அணி வீரர்கள் 27 முறை பந்தை அடித்தனர். ஆனால் அங்கே நின்றிருந்த கோல் கீப்பர் வொஸிங்கா, அவற்றை தடுத்து நிறுத்தி விட்டார். 7 முறை, அவரது தடுப்பால் மட்டுமே, ஸ்பெயின் அணியின் கோல் முயற்சிகள் தோல்வியை தழுவின. நேரம் முடிவில், இரு அணிகளும் கோல் அடிக்காததால், போட்டி டிரா ஆனது.


வலிமை மிகுந்த ஸ்பெயின் அணியுடன் சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக விளையாட வரும் அணி டிரா செய்தது, வெற்றியை காட்டிலும் பன்மடங்கு மதிப்பு வாய்ந்தது என்கின்றனர், விளையாட்டு ரசிகர்கள்.


இதனால் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கேப் வெர்டே அணி வீரர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆட்டம் முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் கோல்கீப்பர் வொஸிங்காவின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 20 லட்சம் அதிகரித்தது. மற்ற வீரர்களின் இன்ஸ்டா பக்கங்களும் லட்சங்களில் உயர்ந்து கொண்டிருக்கின்றன.