சாதனை மழையில் மெஸ்ஸி: உலக கோப்பை கால்பந்தில் அசத்தல்

கன்சாஸ் சிட்டி: அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் நடந்த உலக கோப்பை கால்பந்து 'ஜே' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' அர்ஜென்டினா அணி, அல்ஜீரியாவை சந்தித்தது. இதில் மெஸ்ஸி 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுக்க அர்ஜென்டினா அணி 3-0 என வெற்றி பெற்றது.
இதில் மெஸ்ஸி படைத்த சாதனைகள்:


200வது போட்டி
அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டி மெஸ்ஸியின் 200வது சர்வதேச போட்டியானது. இதுவரை 120 கோல் அடித்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் அர்ஜென்டினா வீரரானார் மெஸ்ஸி.


* தவிர, சர்வதேச அரங்கில் 3வது வீரரானார் மெஸ்ஸி. ஏற்கனவே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (229 போட்டி), குவைத்தின் பதர் அல்-முதாவா (202) இந்த இலக்கை எட்டினர்.

நான்காவது வீரர்
உலக கோப்பை அரங்கில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த 4வது அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி. ஏற்கனவே கில்லெர்மோ ஸ்டாபிலே (1930, எதிர்: மெக்சிகோ), கேப்ரியல் பாடிஸ்டுடா (1994ல் எதிர்: கிரீஸ், 1998ல் எதிர்: ஜமைக்கா), கான்சலோ ஹிகுவேன் (2010, எதிர்: தென் கொரியா) இச்சாதனை படைத்திருந்தனர்.


* அர்ஜென்டினாவுக்காக 11வது 'ஹாட்ரிக்' கோல் அடித்த மெஸ்ஸி, ஒட்டுமொத்தமாக 61 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார்.

குளோஸ் சாதனை சமன்

அல்ஜீரியாவுக்கு எதிராக 3 கோல் அடித்த அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் உடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 16 கோல் அடித்துள்ளனர். அடுத்த இடத்தில் பிரேசிலின் ரொனால்டோ (15 கோல்) உள்ளார்.

இப்பட்டியலில் 'டாப்-5' வீரர்கள்

வீரர்/நாடு போட்டி கோல்

குளோஸ்/ஜெர்மனி 24 16

மெஸ்ஸி/அர்ஜென்டினா 27 16

ரொனால்டோ/பிரேசில் 19 15

ஜெர்டு முல்லர்/ஜெர்மனி 13 14
எம்பாப்வே/பிரான்ஸ் 15 14


ரொனால்டோ வழியில்...
ஐந்து உலக கோப்பை சீசனில் குறைந்தபட்சம் ஒரு கோல் அடித்த 2வது வீரரானார் மெஸ்ஸி. ஆறாவது முறையாக உலக கோப்பையில் விளையாடும் மெஸ்ஸி, 2006ல் 1, 2014ல் 4, 2018ல் 1, 2022ல் 7, 2026ல் 3 கோல் அடித்துள்ளார். 2010ல் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
ஏற்கனவே போர்ச்சுகலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இச்சாதனை படைத்திருந்தார். இவர், 5 சீசனில், 8 கோல் (2006, 2010, 2014, 2022ல் தலா 1, 2018 ல்4) அடித்துள்ளார்.


முதல் வீரர்


உலக கோப்பை வரலாற்றில் 6 வது முறையாக (2006, 2010, 2014, 2018, 2022, 2026) பங்கேற்ற முதல் வீரரானார் மெஸ்ஸி.

சீனியர் வீரர்

உலக கோப்பை அரங்கில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த மூத்த வீரரானார் (38 ஆண்டு, 357 நாள்) மெஸ்ஸி. இதற்கு முன், 2018ல் ஸ்பெயின் அணிக்கு எதிராக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (33 ஆண்டு, 130 நாள்) இச்சாதனை படைத்திருந்தார்.