ஹாலண்ட் அட்டகாசம்... ஈராக் அணியை துவம்சம் செய்தது நார்வே!

1

​பாஸ்டன்: உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் குரூப் 'ஐ' பிரிவு லீக் ஆட்டத்தில், எர்லிங் ஹாலாண்டின் அசத்தல் ஆட்டத்தால், ஈராக் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நார்வே அணி அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை அரங்கில் முதன்முறையாக அடியெடுத்து வைத்த நார்வேயின் 'கோல் மெஷின்' எர்லிங் ஹாலாண்ட், ஆட்டம் தொடங்கிய 29வது நிமிடத்தில், முதல் கோல் அடித்து நார்வேக்கு முன்னிலை தந்தார். இருப்பினும், அசந்துபோகாத ஈராக் அணி, 39வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தது. அந்த அணியின் அய்மென் ஹுசைன்,அடித்த கோலால் ஆட்டம் 1-1 என விறுவிறுப்படைந்தது.

ஆனால், ஈராக் அணியின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த 3 நிமிடங்களில் (43வது நிமிடம்), ஈராக் கோல்கீப்பர் பந்தை கிளியர் செய்ய தாமதித்ததை சாதகமாக்கிய ஹாலாண்ட், மின்னல் வேகத்தில் செயல்பட்டு, நார்வேயின் 2வது கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதியில் நார்வே 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியிலும் நார்வேயின் ஆதிக்கமே தொடர்ந்தது. 76வது நிமிடத்தில் லியோ ஒஸ்டிகார்ட் கோல் போட, நார்வே 3-1 என முன்னிலை பெற்றது. ​ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+5 நிமிடம்) ஈராக் வீரர் அய்மென் ஹுசைன், 'சேம் சைடு கோல்' போட்டு அதிர்ச்சி அளித்தார். முடிவில், நார்வே அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தி, உலகக்கோப்பை தொடரை வெற்றியோடு தொடங்கியது.