ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

1

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 1-2 என பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது.
ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து, நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் நியூசிலாந்தை வென்ற இந்தியா, அடுத்த போட்டியில் அர்ஜென்டினாவுடன் டிரா செய்தது. மூன்றாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது. நேற்று தனது நான்காவது போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணி, தங்கம் வென்ற வலிமையான பெல்ஜியத்தை எதிர்கொண்டது.
போட்டி துவங்கிய 18 வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் ஒரு பீல்டு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் பெல்ஜியம் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 33வது நிமிடம் திபெயு ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 44வது நிமிடத்தில் ஜான் டோமன் ஒரு கோல் அடிக்க இந்திய அணி பின் தங்கியது.
முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

யாருடன் காலிறுதி

'பி' பிரிவு புள்ளிப்பட்டியலில் பெல்ஜியம் (12), ஆஸ்திரேலியா (9), இந்தியா (7), அர்ஜென்டினா (7) அணிகள் 'டாப்-4' இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறின. இன்று இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இப்போட்டியின் முடிவுக்கு ஏற்ப, இந்திய அணி 2 அல்லது 3வது இடம் பிடிக்கும். இதனால் காலிறுதியில் இந்திய அணி, இங்கிலாந்து அல்லது நெதர்லாந்தை சந்திக்க நேரிடும். ஒருவேளை 4வது இடத்துக்கு தள்ளப்பட்டால், வலிமையான ஜெர்மனியை எதிர்கொள்ள வேண்டும்.


பிரியங்கா 41வது இடம்
பிரான்சில் ஒலிம்பிக்கில் நேற்று தடகள போட்டிகள் துவங்கின. இந்தியா சார்பில் 11 வீராங்கனைகள் உட்பட 29 பேர் பங்கேற்கின்றனர். நேற்று ஆண்களுக்கான 20 கி.மீ., நடை பந்தயம் நடந்தது. இந்தியாவின் அக் ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் உட்பட 49 பேர் களமிறங்கினர்.
ஒரு மணி நேரம், 22:36 நிமிடத்தில் வந்த விகாஷ் சிங், 30 வது இடம் பிடித்தார். பரம்ஜீத் சிங் (1 மணி, 23:48 நிமிடம்) 37 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அக் ஷ்தீப் சிங் பந்தயத்தை முடிக்காமல் பாதியில் வெளியேறினார். ஈகுவடார் வீரர் பிரியன் டேனியல் (1:18.55) முதலிடம் பிடித்தார்.
அடுத்து நடந்த பெண்களுக்கான 20 கி.மீ., போட்டியில் பிரியங்கா களமிறங்கினார். மொத்தம் 45 பேர் பங்கேற்றதில், பிரியங்கா (1 மணி, 39.55 வினாடி) 41வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Advertisement