தாயகம் திரும்பினார் வினேஷ் போகத்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

1

புதுடில்லி: ''ஒலிம்பிக்கில் எனக்கு தங்கப்பதக்கம் தரவில்லை. ஆனாலும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும் மரியாதையும் ஆயிரம் தங்கப் பதக்கங்களைவிட அதிகம்,'' என வினேஷ் போகத் உருக்கமாக தெரிவித்தார்.

பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதன் மல்யுத்த (50 கிலோ 'பிரீஸ்டைல்') பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார் வினேஷ் போகத். பைனலுக்கு முன் நடந்த எடை சோதனையில், 100 கிராம் கூடுதலாக இருக்க, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்தார். குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் வழங்க கோரிய இவரது 'அப்பீலை' சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் நிராகரித்தது.


டில்லியில் அழுதார்: இந்த சோகத்தில் பாரிசில் இருந்து கிளம்பிய வினேஷ், நேற்று டில்லி விமான நிலையம் வந்திறங்கினார். இவருக்கு மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சக மல்யுத்த நட்சத்திரங்களான பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் உள்ளிட்டோர் வரவேற்றனர். இவர்களை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட வினேஷ், சாக்சி மாலிக்கின் தோளில் சாய்ந்தவாறு அழுதார். இவருக்கு ஆறுதல் அளித்தனர்.
வினேஷ் தாய் பிரேமலதா கூறுகையில்,''வினேஷை வரவேற்க, எங்கள் கிராமத்தில் இருந்து நிறைய பேர் டில்லி வந்தனர். எனக்கு வினேஷ் தான் எப்போதும் சாம்பியன். ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தைவிட, நாட்டு மக்கள் அவருக்கு பெரிய கவுரவத்தை அளித்துள்ளனர்,'' என்றார்.

சாக்சி மாலிக் கூறுகையில்,''வினேஷ் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்படுகிறார். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு, மன அமைதி பெறுவார். பெண்கள் நலனுக்காக அவர் செய்த காரியங்கள் பாராட்டுக்குரியது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாவிட்டாலும், எங்களுக்கு அவர் தான் சாம்பியன்,''என்றார்.

கிராமத்தில் கொண்டாட்டம்: டில்லியில் இருந்து மதியம் 11 மணி அளவில் திறந்த 'ஜீப்'பில், ஹரியானாவில் உள்ள தனது சொந்த கிராமமான பலாலிக்கு புறப்பட்டார் வினேஷ். இவரது ஜீப்பை பின் தொடர்ந்து பலரும் கார்களில் அணிவகுந்து வந்தனர். செல்லும் வழியில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிய, பயணம் தாமதமானது. மாலையில் தான் கிராமத்தை சென்றடைந்தார். அங்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, கொண்டாட்டங்கள் அரங்கேறின.
வினேஷ் கூறுகையில்,''எனக்கு ஆதரவு அளித்த ஒட்டுமொத்த தேசத்துக்கும் நன்றி. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. பாரிஸ் ஒலிம்பிக்கில் எனக்கு தங்கப்பதக்கம் தரவில்லை. ஆனாலும் இந்திய மக்கள் என் மீது காட்டிய அன்பும் மரியாதையும் ஆயிரம் தங்கப் பதக்கங்களைவிட அதிகம்,'' என்றார்.


'சல்யூட்'
இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவரும் முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரருமான ககன் நரங் உடன் தான் பாரிசில் இருந்து டில்லி திரும்பினார் வினேஷ். இருவரும் ஒரே விமானத்தில் வந்தனர். ககன் வெளியிட்ட செய்தியில்,''பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் நுழைந்த முதல் நாளில் இருந்து சாம்பியன் வீராங்கனையாக ஜொலித்தார் வினேஷ். எப்போதும் நமது சாம்பியனாக இருப்பார். 140 கோடி இந்திய மக்களின் கனவுக்கு உத்வேகம் அளிக்க, சில நேரங்களில் பதக்கம் தேவைப்படாது. பல தலைமுறைக்கு ஊக்கம் அளித்துள்ளார் வினேஷ். உங்களது மனஉறுதிக்கு சல்யூட்,''என குறிப்பிட்டுள்ளார்.



மனம் மாறுமா

ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விரக்தியில், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வினேஷ் போகத், 29. இவரது முடிவு மாற வாய்ப்பு உள்ளது. மீண்டும் மல்யுத்தத்தில் களமிறங்கலாம். இது குறித்து பாரிசில் இருந்து டில்லிக்கு புறப்படும் முன் வினேஷ் வெளியிட்ட செய்தியில்,''பைனலுக்கு முன் எடையை குறைக்க அனைத்து முயற்சியும் மேற்கொண்டேன். ஆனால் நேரம் போதவில்லை. என் நேரமும் சரியில்லை. இலக்கை எட்ட முடியவில்லை. என் விதி அப்படி இருந்தது. என்னால் 2032 வரை விளையாட முடியும். என்னுள் இன்னும் மல்யுத்த திறமை உள்ளது. எதிர்காலத்தை கணிக்க இயலாது. சரியான விஷயத்திற்காக எனது போராட்டம் தொடரும்,'என தெரிவித்துள்ளார்.

Advertisement