பாரிஸ் ஒலிம்பிக்: அமெரிக்கா 'நம்பர்-1'

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 40 தங்கம் உட்பட 126 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடம் பிடிதத்து.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கம் வென்ற அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா 40 தங்கம் வென்ற போதும், 27 வெள்ளி, 24 வெண்கலம் கைப்பற்றியதால் (91 பதக்கம்) 2வது இடம் பிடித்தது. போட்டியை நடத்திய பிரான்ஸ், 5வது இடம் பெற்றது.

71வது இடம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் ஒரு வெள்ளி, துப்பாக்கி சுடுதலில் 3, மல்யுத்தம், ஹாக்கியில் தலா ஒரு வெண்கலம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 71வது இடம் பிடித்தது. இதன்மூலம் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 3வது முறையாக 71வது இடம் பெற்றது. இதற்கு முன் அட்லாண்டா (1996), சிட்னி (2000) ஒலிம்பிக்கில் தலா ஒரு வெண்கலம் மட்டும் வென்றிருந்த இந்தியா, பதக்கப்பட்டியலில் 71வது இடம் பிடித்தது.

* இம்முறை ஈட்டி எறிதலில் ஒரு தங்கம் வென்ற பாகிஸ்தான், பதக்கப்பட்டியலில் இந்தியாவை முந்தி 62வது இடத்தை டொமினிகாவுடன் பகிர்ந்து கொண்டது.

19வது முறை
ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 19வது முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தது. சோவியத் யூனியன் 6 (1956, 1960, 1972, 1976, 1980, 1988), பிரான்ஸ் (1900), பிரிட்டன் (1908), ஜெர்மனி (1936), ஒருங்கிணைந்த அணி (1992), சீனா (2008) தலா ஒரு முறை முதலிடம் பிடித்தன.

1044 பதக்கம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் 329 தங்கம், 330 வெள்ளி, 385 வெண்கலம் என, மொத்தம் 1044 பதக்கம் வழங்கப்பட்டன. இதில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்சந்த், அதிகபட்சமாக 4 தங்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக இவர், 5 பதக்கம் (4 தங்கம், ஒரு வெண்கலம்) கைப்பற்றினார்.

* அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் சீன நீச்சல் வீராங்கனை யுபெய் ஜாங் முதலிடத்தை தட்டிச் சென்றார். இவர், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கம் பெற்றார்.

Advertisement