சொப்பன லோகத்தில் ஸ்வப்னில்... * வெண்கலம் வென்று ஆனந்தம் * துப்பாக்கிசுடுதலில் 3வது பதக்கம்

சாட்டியாரக்ஸ்: ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் 'ரைபிள் 3 பொசிஷன்ஸ்' பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் ஸ்வப்னில் குசாலே. நேற்று இவர் வெண்கலம் கைப்பற்ற, பாரிசில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்தது.
பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் நடக்கிறது. இதன் துப்பாக்கிசுடுதலில் ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள் 3 பொசிஷன்ஸ்' பிரிவில் போட்டி நடந்தன. இதன் தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே, 590 புள்ளி எடுத்து, 7வது இடம் பிடித்து (மொத்தம் 8 பேர்), பைனலுக்கு முன்னேறினார்.
நேற்று பைனல் நடந்தது. மூன்று நிலைகளில் போட்டி நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 15 வாய்ப்பு தரப்பட்டன.
* முழங்கால் இட்டு அமர்ந்தபடி ('நீலிங்') நடந்த போட்டியில் 153.3 புள்ளி எடுத்து 6வது இடத்துக்கு முன்னேறினார்.
* படுத்துக் கொண்டு சுடுதல் பிரிவில் ('புரோன்') சிறப்பாக செயல்பட்ட ஸ்வப்னில், 156.8 புள்ளி பெற்றார். முதல் இரு பிரிவில் 310.1 புள்ளியுடன் 5வது இடத்துக்கு முன்னேறினார்.
* பின் நின்று கொண்டு சுடுதல் ('ஸ்டாண்டிங்') பிரிவில் 10 வாய்ப்புகள் தரப்பட்டன. 'டாப்-6' இடம் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஸ்வப்னில், 3வது இடம் பிடிக்க, இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு அதிகரித்தது.
கடைசி 5 'ஷாட்', 6 வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வாய்ப்பு முடிவில் கடைசி இடம் பெற்ற வீரர் வெளியேறினார். ஸ்வப்னில் முதல் 4 வாய்ப்பில் 10.5, 9.4, 9.9, 10.0 என சற்று தடுமாற, பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் 451.4 புள்ளி எடுத்து மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 0.5 புள்ளி கூடுதலாக எடுத்திருந்தால் வெள்ளியை வசப்படுத்தி இருக்கலாம்.

பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'வெண்கலம் வென்ற ஸ்வப்னிலுக்கு வாழ்த்துகள். இவரது திறமை ஸ்பெஷலானது. இப்பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என சாதித்துள்ளார். ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,' என தெரிவித்துள்ளார்.

முதல் பதக்கம்
ஒலிம்பிக் 50 மீ., 'ரைபிள் 3 பொசிஷன்ஸ்' பிரிவில் நேற்று இந்தியா முதல் பதக்கம் (ஸ்வப்னில்) வென்றது. முன்னதாக 2012 ல்(லண்டன்) இந்திய வீரர் ஜாய்தீப் கர்மாகர் பைனலுக்கு முன்னேறி, 4வது இடம் பிடித்து இருந்தார்.

தோனி போல...
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஸ்வப்னில் குசாலே 28. கடந்த 2012 முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார். ரயில்வேயில் 'டிக்கெட் கலெக்டராக' வேலை செய்கிறார்.
கடந்த 2015ல் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி, வாழ்க்கை வரலாறு குறித்து வெளியான 'எம்.எஸ்.தோனி' படத்தை பலமுறை பார்த்து துாண்டப்பட்டார்.
அவரைப் போல மிகவும் 'கூலானவர்' ஸ்வப்னில். பைனலில் மிக நிதானமாக செயல்பட்டு, 7 வது இடத்தில் இருந்து 3வது இடம் பிடித்து தனது முதல் ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்துள்ளார்.
அவர் கூறுகையில்,'' தோனி தான் எனக்கு ரோல் மாடல். அவரைப் போல களத்தில் 'கூலாக' இருக்க விரும்புவேன். தோனியைப் போல நானும் 'டிக்கெட் கலெக்டர்' ஆக இருப்பது ஸ்பெஷலானது,'' என்றார்.

7வது பதக்கம்
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 7வது பதக்கம் (1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றது. அபினவ் பிந்த்ரா (தங்கம், 2008), ராஜ்யவர்தன் ரத்தோர் (வெள்ளி, 2004), விஜய் குமார் (வெள்ளி, 2012), ககன் நரங் (வெண்கலம், 2012), 2024ல் மனுபாகர் 2, சரப்ஜோத் 1 வெண்கலம் வென்றனர்.
* இதற்கு முன் அதிகபட்சமாக ஹாக்கியில் 12 (8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்), மல்யுத்தத்தில் 7 பதக்கம் (2 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றது இந்தியா.

அஞ்சும் '18'
பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள் 3 பொசிசன்ஸ்' பிரிவில் நேற்று தகுதிச்சுற்று நடந்தன. இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் 584 புள்ளி எடுத்து 18 வது இடம் பிடித்தார். மற்றொரு வீராங்கனை சிப்ட் கவுர் (575) 31 வது இடத்துக்கு (மொத்தம் 32) தள்ளப்பட, பைனல் வாய்ப்பை இழந்தனர்.

எதுவும் சாப்பிடவில்லை
ஸ்வப்னில் கூறுகையில்,'' ஒரு 'பிளாக் டீ' மட்டும் குடித்துவிட்டு பைனலுக்கு வந்தேன். வேறு எதுவும் சாப்பிடவில்லை. எனது இதய துடிப்பு எகிறியது. இதை கட்டுப்படுத்த முயற்சித்தேன். பல ஆண்டு கடின உழைப்பு மட்டும் எனது மனதில் வந்து சென்றது. பதக்க சொப்பனம் நனவானதும் மகிழ்ச்சி அடைந்தேன். வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல உணர்ந்தேன்,'' என்றார்.

Advertisement