நீச்சல்: லெடிக்கி 'தங்கம்'

பெண்களுக்கான நீச்சல் 1500 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில், இலக்கை 15 நிமிடம், 30.02 வினாடியில் கடந்த அமெரிக்காவின் கேட்டி லெடிக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், தனது சொந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார். இதற்கு முன் இவர், டோக்கியோ ஒலிம்பிக் 1500 மீ., தகுதிச் சுற்றில் பந்தய துாரத்தை 15 நிமிடம், 35.35 நிமிடத்தில் கடந்திருந்தார்.

இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் லெடிக்கியின் 2வது பதக்கம். ஏற்கனவே 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். தவிர இது, ஒலிம்பிக் அரங்கில் லெடிக்கி வென்ற 8வது தங்கம். இதுவரை 8 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 12 பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் 13வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் லெடிக்கி. முதலிடத்தில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (28 பதக்கம்) உள்ளார்.

டென்னிஸ்: ஸ்வியாடெக் தோல்வி
டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் போலந்தின் ஸ்வியாடெக், சீனாவின் கின்வென் ஜெங் மோதினர். இதில் ஏமாற்றிய உலகின் 'நம்பர்-1' ஸ்வியாடெக் 2-6, 5-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

* ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் ஸ்பெயினின் ரபெல் நடால், கார்லஸ் அல்காரஸ் ஜோடி 2-6, 4-6 என அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியிடம் தோல்வியடைந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் நடாலின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இவர், ஒற்றையரில் தோல்வியடைந்தார்.

* ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பால் மோதினர். இதில் அல்காரஸ் 6-3, 7-6 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Advertisement